பதிவு செய்த நாள்
28
மே
2018 
03:05
 
 திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு: இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடந்தது. வானூர் வட்டம், இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 19ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 7:00 மணிக்கு அபிஷேகம், சந்திரசேகரர் உள் புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மூலவர் அபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு நாளும் இரவு 7:00 மணிக்கு, சுவாமி அலங்கரிக்கப்பட்டு, ரிஷப வாகனம், புன்னை மர வாகனம், குதிரை வாகனங்களில் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு திருத்தேர் விழா நடந்தது. வானூர் தொகுதி எம்.எல்.ஏ., சக்ரபாணி தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். வானூர் ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், தொள்ளாமூர் கண்ணன், கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று காலை 9:00 மணிக்கு, தீர்த்தவாரி, நாளை 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு, தெப்பல் உற்சவம், 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு விடையாற்றி உற்சவம், 31ம் தேதி மாலை 7:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் செல்வராசு, செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள் செய்துள்ளனர்.