பதிவு செய்த நாள்
02
ஜூன்
2018
11:06
திருப்பூர்: வைகாசி விசாக தேர்த் திருவிழாவில், தரிசன நாளான நேற்று, சிவகாமி அம்மன் சமேத ஸ்ரீ நடராஜப்பெருமான், சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த, 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம், தெப்பத்திருவிழாவுக்கு பின், மகா தரிசனம் நேற்று நடந்தது. காலை, 9:00 மணிக்கு, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நடராஜர், சிவகாமி அம்மைக்கு, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பொற்கிரீடம், மரகதப்பச்சை மற்றும் ரத்தின கற்கள் பதித்த ஆபரணங்களை அணிந்து, பக்தர்களுக்கு அபயம் அளித்த திருக்கோலத்தில் எழுந்தருளினர். தாயார்களுடன், வீரராகவப்பெருமாள், நவரத்தின கிரீடம் மற்றும் ஆபரணங்கள் தரித்து, ஆதிசேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.