பதிவு செய்த நாள்
01
ஜூன்
2018
06:06
கரூர்: தமிழகத்தில் முதன் முறையாக, ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை, 100 கோடி முறை உச்சாடனம் செய்து நடத்தப்படும் பெருவேள்வி, துவங்கியது. கரூரில், பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 2006ல், நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, அடுத்த கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக, தேவ பிரதட்சணம் பார்த்தபோது, ஓம் நமசிவாய மந்திர உச்சாடனம் செய்ய உத்தரவானது.
அதன்படி, கோவில் வளாகத்தில், காலை பெருவேள்வி துவங்கியது. இதில், சிவனாடியார்கள், சிவபக்தர்கள் தினமும் காலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை, ஓம் நமசிவாய மந்திரம் சொல்ல உள்ளனர். இவ்வேள்வி வரும், 10 வரை நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களிலிருந்தும், ஏராளமான சிவனாடியர்கள் பங்கேற்க உள்ளனர்.
* பக்தர்களுக்கு கவுன்டிங் மிஷின் ஒவ்வொரு முறை மந்திரம் சொல்லும் போதும், அதை பதிவு செய்து கொள்ளும் வகையில், பக்தர்களுக்கு கவுன்ட்டிங் மிஷின் வழங்கப்படுகிறது. ஒருமுறை மந்திரம் சொல்லிய பிறகு, தங்களிடம் உள்ள மிஷினில் பொத்தானை அழுத்த வேண்டும். அதன் மூலம், எத்தனை முறை மந்திரம் சொல்லப்பட்டுள்ளது என்பதை, பக்தர்கள் அறிய முடியும். இதற்காக, 5,000 கவுன்டிங் மிஷின்கள் வாங்கப்பட்டுள்ளன.