பதிவு செய்த நாள்
18
ஜன
2012
11:01
கோவை : நோய் தாக்காமல் கால்நடைகளை பெருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், இரு மாநிலங்களைச் சேர்ந்த, 18 கிராம மக்கள் சிவபெருமானுக்கு, நேற்று பாலாபிஷேகம் நடத்தி, வழிபட்டனர். வேலந்தாவளம்-பிச்சனூர் கிராமத்தில், 150 ஆண்டு பழமை வாய்ந்த, ஆல்கொண்ட மாதேஸ்வரன் கோவில் (மாலை கோவில்) உள்ளது. இக்கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை, காணும் பொங்கலன்று, சிவபெருமான் தரிசன பூஜை விமரிசையாக நடக்கிறது. தாங்கள் வளர்க்கும், "கால்நடைகளை, எவ்வித நோயும் தாக்காமல், பாதுகாக்க வேண்டும். கால்நடைகள் பெருக வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த, 18 கிராம விவசாயிகள், குடும்பத்துடன் வந்து, சிவபெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். பாலக்காட்டில் இருந்து, 150 ஆண்டுகளுக்கு முன், இவ்வழியாக கோவை சென்ற மாட்டு வண்டிகளில் ஒன்று, நகர முடியாமல் நின்று விட்டது. வண்டியில் பூட்டியிருந்த இரட்டை காளைகள், மண்டியிட்டு படுத்து விட்டன. அதிர்ச்சி அடைந்த வண்டிக்காரர், அப்பகுதியில் வசித்த சிதம்பரம்பிள்ளை என்பவரிடம் தெரிவித்து அவரை அழைத்தார். அவர், தெய்வத்தை வணங்கி, தீர்த்தம் தெளித்து இயல்பு நிலைக்கு திரும்ப வைத்ததாகவும் ஐதீகம். அன்று முதல் இன்று வரை, மாட்டு வண்டியில் செல்பவர்கள், கால் நடை வளர்ப்பவர்கள், வேலுடன் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கிச் செல்வதை, கடமையாக கொண்டனர். மண்ணால் உருவமைக்கப்பட்ட காளை பொம்மைகளை, கோவிலில் வைத்து வழிபடுகின்றனர். குழந்தை வரம் வேண்டி, குழந்தை உருவ பொம்மைகளை வைத்து, குழந்தை இல்லாத பெண்கள் இங்கு, வழிபடுவது பிரசித்தம் பெற்றுள்ளது. தை 1,2 தேதிகளில் சிவபெருமானுக்கு பெரிய அபிஷேகமும், தை மூன்றாவது நாள் காணும் பொங்கலன்று பாலாபிஷேகம் நடத்தி, பிரார்த்தனை செலுத்துவதும் வழக்கமாக நடந்து வருகிறது. இதில் தமிழக,கேரள விவசாயிகள் பங்கேற்று வழிபடுவது, இக்கோவிலில் விசேஷம் ஆகும். காணும் பொங்கலன்று ஈனும் கன்று குட்டிகளை விவசாயிகள், இக்கோவிலுக்கு தானமாக வழங்குகின்றனர். நேற்று மூன்று கன்றுகள் கோவிலுக்கு வழங்கப்பட்டன. ஆண்டு தோறும் நடக்கும் பூஜை, திருவிழாவில், இக்கோவிலை தோற்றுவித்த சிதம்பரம்பிள்ளையின் பேத்தி சாரதாமணிதேவி, சென்னையில் இருந்து வந்து பங்கேற்பதை வழக்கமாக கொண்டுள்ளார். காணும் பொங்கலன்று பிறந்த காளை மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டன. மதுக்கரை -வேலந்தாவளம் ரோட்டில் கூட்டம் அதிகம் இருந்ததால், பாதுகாப்பு பணியில் க.க.சாவடி போலீசார் ஈடுபட்டிருந்தனர்.