வழுதாவூர்: பாலபாடிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. வழுதாவூர் அடுத்த பாலபாடிக்குப்பம் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள அரசமரத்து விநாயகர், பாலமுருகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கையம்மன், ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா கடந்த 1ம் தேதி கணபதி ஹோமம், கோ பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி பூஜை தொடங்கியது. நேற்று காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, பஞ்ச சுத்த ஹோமம், நாடிசந்தானம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, காலை 7:30 மணி முதல் கலசங்கள் புறப்பாடு, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.