குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகாதீஷ் கிருஷ்ணன் கோயில் பலரும் அறிந்ததுதான். அதேபெயரில் மற்றுமொரு கோயில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது. மிகப்பெரிதாக விளங்கும் இக்கோயிலுக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலுள்ள கண்ணன் விக்ரகம், 1671- ல் மகாராணா ராஜ்சிங் என்னும் மன்னனால் மதுராவிலிருந்து கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயிலுக்கு எதிரே ராஜ் சமந்த் என்னும் மிகப்பெரிய ஏரி உள்ளது. வல்லபாச்சார்யார், புஷ்டி, மார்க்கம் என்னும் இரு மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள். இதில் புஷ்டி மார்க்கத்தினர் இக்கோயில் கண்ணனை ஒரு குழந்தையாக பாவித்து வழிபடுவர். அதாவது அதிகாலையில் துயிலெழுப்புவது, நீராட்டுவது, நிவேதனம் படைப்பது என்று வாத்சல்யத்துடன் செய்வார்கள். கோயில் வளாகத்தில் அற்புதமான நந்தவனம் அமைந்துள்ளது. மிகவும் ரம்மியமான சூழலை இது உருவாக்குகிறது. இங்குள்ள நூலகமும் குறிப்பிடத்தக்க அம்சம். அரிய ஆன்மிக நூல்கள் பல இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
கோயில் கருவறையில் நின்ற கோலத்தில் கண்ணன் அருள்புரிகிறார். இவருக்கு ஒருநாளில் 25 முறை மாற்றி மாற்றி அலங்காரம் செய்வது ஒரு அற்புதமான நிகழ்வு. சிறப்பு நாட்களில் தங்க ஆபரணங்கள், நவரத்தின ஆபரணங்கள் அணிவிக்கப்படுகின்றன. மாதாந்திர விழாக்களில் ஏகாதசி, பவுர்ணமி நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கிருஷ்ணன் ஜெயந்தி விழா மிகக் கோலாகலமாக நடைபெறும். பல்லயிரக்கணக்கான மக்கள் தரிசித்து மகிழ்வர். ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரிலிருந்து அஜ்மீர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 8-ல். 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கங்ரோலி என்னும் ஊர். இங்கேதான் பிரசித்தபெற்ற இந்த துவாரகாதீஷ் கோயில் அமைந்துள்ளது.