பதிவு செய்த நாள்
04
ஜூன்
2018
01:06
ஸ்ரீ என்றும் லட்சுமி என்றும் போற்றப்படும் தேவியானவள் எல்லாச் செல்வங்களுக்கும் தலைவியாக விளங்கி மக்களின் கர்ம வினைகளுக்கு ஏற்ப அருள்கிறாள். சில விசேஷ நாட்களில் செய்யக்கூடிய பிரார்த்தனைகளினால் நமது தீய கர்மாக்கள் ஒழிந்து நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நமது இந்து மதத்தில் உள்ள நம்பிக்கை. அதுவே பலவிரதங்கள் ஏற்பட்டதற்குக் காரணம். அவையே நம் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுக்கின்றன. இதுபோன்று ஓர் உயர்ந்த விரதம்தான் லட்சுமி - குபேர பூஜை. தீபாவளியன்று லட்சுமி குபேரனை வழிபடுவது சிறப்பு. குபேரனின் தவத்தை மெச்சி அவனை அஷ்ட திக்பாலர்களில் ஒருவனாக நியமித்தார். சிவபெருமான். அதன்பின் லட்சுமி தேவி குபேரனை தனம் மற்றும் தானியங்களுக்கு அதிபதியாக்கினாள். சிரித்த முகமும், குட்டையான வடிவமும் கொண்ட குபேரன் இடக்கையில் சங்கநிதி, வலக்கையில் பதுமநிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி தேவி மற்றும் தன் துணைவியார் சித்தரிணியுடன் காட்சி தரும் அழகைக் காணக் கண்கோடி வேண்டும்.
குபேரனுக்கு உண்டான திசை வடக்கு, வடக்குநோக்கி அவர் படத்தை வைத்து வழிபடுவது சிறப்பு. செந்தாமரை, வெண்ணிற மலர்கள், பாரிஜாதமலர், வில்வம், துளசி நல்ல இனிப்பு வகைகள், பால், பழம் நைவேத்தியங்கள் செய்து பூஜை செய்தால் லட்சுமியின் அருளோடு குபேரனின் அருளும் கிடைக்கும்.
“ஓம்யக்ஷாய குபேராய வைச்ரவணாய தனதாந் யாதிபதயே
தநதாந்ய ஸம்ருத்திம்மே தேஹி தாபய
ஸ்வாஹா”
என்ற மந்திரத்தைச் சொல்லி வழிபடலாம். குபேர மந்திரத்தைத் தினமும் சொல்லி வழிபடலாம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்வது பவுர்ணமியில் வழிபடுவது, சந்திர தரிசனம் வரக்கூடிய நாளில் செய்வது, சிவன், விஷ்ணுவுக்கு உண்டான விரத தினங்களான பிரதோஷம் ஏகாதசி நாளில் குபேர மந்திரங்களைச் சொல்லி வழிபடுவது சிறப்பு. இதனால் லட்சுமி கடாட்சமும், குபேரனின் கடாட்சமும் அமைந்து வாழ்க்கை சிறப்புறும். வடக்கு திசைக்குக் கவாலராக குபேரன் இருப்பதால் வடக்கு நோக்கிய விஷ்ணு, சிவன், அம்பிக்கை, கணபதி, முருகனைத் தரிசிப்பதும் சிறப்பாகும். மதுரை -சிம்மக்கல்லில் அருள்பவர் ஆதிசொக்கநாதர் மற்றும் மீனாட்சி, குபேரன் தன்னுடைய செல்வம் பெருக பூஜித்த லிங்கம், அவர் கைப்பட பூஜித்த லிங்கம் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு வந்து மீனாட்சி ஆதி சொக்கநாதரை தரிசித்தால் குபேரன் அருள் கிட்டும். குபேரன் வழிபட்டது தஞ்சைபுரீஸ்வரர். குபேரன் பிரதிஷ்டை செய்த இந்தச் சிவபெருமானையும், அம்பாளையும் விண்ணவர்கள் அனைவரும் வந்து வணங்கி சென்றதால் இந்தக் கோயில் பகுதி ‘விண்ணவர்கள் ஆண்ட கரை’ என்று அழைக்கப்பட்டு நாளடைவில் வெண்ணாற்றங்கரை ஆனது, தஞ்சை பழைய பஸ் நிலையத்திலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தஞ்சபுரீஸ்வரரை வழிபட்டால் குபேரன் அருள் கிட்டும் என்பது நிச்சயம்.
திருப்பதியில் குபேர காலம் எனப்படும் வியாழக்கிழமை மாலை 6:00 மணி முதல் 6:30 மணிக்குள் ‘நேத்ரபூலாங்கி சேவையில் பெருமானின் பாதங்களை முதலில் தரிசித்துப் பின்பு பாதத்திலிருந்து சிரசுவரை சேவித்து விட்டு அன்றிரவு கட்டாயம் மலையில் தங்கி மறுநாள் காலையில் அலங்காரப் ரூபப் பெருமானைத் தரிசிக்க வியாபார அபிவிருத்தி தொழிலில் லாபம், சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். திருவண்ணாமலையில் அருணாசல மலையை கிரிவலமாக வரும் போது குபேர லிங்கத்தைத் தரிசிக்கலாம். இது குபேரனால் வழிபடப்பட்ட லிங்கமாகும். பொருளாதாரத்தில் குன்றி இருப்போர் அந்த லிங்கத்தை வழிபட்டால் செல்வ வளம் பெருகும். கும்பகோணம் - திருவாரூர் பாதையிலுள்ள சாக்கோட்டை என்ற ஊரிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிவபுரம். குபேரன் வந்து வெகுநாட்கள் தங்கியிருந்து ஈசனையும், அம்பிகையையும் வழிபட்டு பேறு பெற்றதாக இத்தலம் போற்றப்படுகிறது. தளபதி எனும் பெயரை உடைய ஒருவனுக்கு இத்தல ஈசன் குபேர ஸ்தானத்தை அளித்தாகவும் அதனால் இத்தலம் குபேரபுரம் என்னும் பெயரால் வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் - திருவாரூர் பாதையில் அமைந்துள்ளது. கீவனூர். சந்திர குப்தன் எனும் வைசியன் தன்னிடமிருந்து சகல செல்வங்களையும் இழந்து மனம் நொந்து ஈசன் கெடிலியப்பராக அருளும் இத்தலத்தை அடைந்தான். திருக்கோயிலுக்குள் புகுந்து நந்தியம் பெருமானை வணங்கி கோயிலை மூன்று முறை வலம் வந்தான். ஈசன் கருணையுடன் இத்தலத்திலேயே நித்தியவாசம் புரியும் குபேரனுக்கு சந்திரகுப்தனை அடையாளம் காட்டினார். சந்திரகுப்தன் தனிச் சன்னிதியில் அருளும் குபேரனை வணங்கி இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றான். வீட்டிலேயே குபேர காயத்ரி சொல்லி வணங்க இல்லம் செழுமை பெறும்.