பதிவு செய்த நாள்
05
ஜூன்
2018
12:06
மோகனூர்: ஆரியூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மோகனூர் ஒன்றியம், ஆரியூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 17 ஆண்டுகளுக்கு முன் நடந்த, கோவில் திருவிழாவில், இரு பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருவிழா தடைபட்டது. தற்போது, இருதரப்பினரும், சமரசம் செய்து கொண்டனர். இதையடுத்து, கடந்த, 25ல், காப்புகட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம், இரவு, 7:00 மணிக்கு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று, புனித நீராடினர். அதையடுத்து, கிராயூர், பனைமரத்துப்பட்டி, குளத்தூர் வழியாக நடந்து சென்று, கோவில் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, 7:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், கிடாவெட்டு, மாலை, 4:00 மணிக்கு, வண்டி வேஷம், இரவு, 7:00 மணிக்கு, பாட்டுக்கு பாட்டு பட்டிமன்றம் நடக்கிறது. தொடர்ந்து, கம்பம் பிடுங்கி, ஊர் கிணற்றில் விடப்படுகிறது. நாளை காலை, 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், ஊர்மக்கள் செய்தனர்.