பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
சேலம்: ஏற்காடு, வெள்ளக்கடை கிராமத்தில், பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜை இன்று நடக்கிறது. ஏற்காடு மலையில் அமைந்துள்ள வெள்ளக்கடை கிராமத்தில், பொங்கல் பண்டிகையை தொடர்ந்து, இன்று பெண்கள் மட்டும் பங்கேற்கும் விசேஷ அம்மன் பூஜை நடக்கிறது. இந்த பூஜையில், பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண் குழந்தைகள் பூஜையின் போது, தாயுடன் இருக்கலாம். விசேஷ அம்மன் பூஜை நடக்கும் போது, வெள்ளக்கடையில் உள்ள ஆண்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேறிவிடும் வினோத நடைமுறை பல ஆண்டுகளாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அம்மன் பூஜையை, ஊரில் உள்ள மூத்த மூதாட்டி தலைமையில் நடத்துகின்றனர். அம்மனுக்கு பிடித்த கேழ்வரகு, பழம், பூ, தேங்காய் வைத்து படையல் செய்யப்படும். முன்னதாக, ஊர் எல்லையில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் ஊர்வலமாக சென்று, அம்மன் வழிபாட்டில் ஈடுபடுவர். இன்று நடக்கும் அம்மன் பூஜையில், வெளியூரில் இருந்து வருபவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. அதே போல, வெள்ளக்கடையை சேர்ந்த ஆண்கள், ஊர் எல்லையில் காவலுக்கு இருப்பார்கள். புத்தாடை அணிந்து பூஜையில் ஈடுபடும் பெண்கள், கும்மிபாட்டு பாடியும், நடனமாடி அம்மன் வழிபாட்டில் ஈடுபடுவர். இன்று காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கும். அம்மன் வழிபாடு முடிந்ததும், பெண்கள் சுவாமிக்கு படையல் செய்த பதார்த்தங்களை உண்டு விரதத்தை முடித்துக் கொள்வர். வெள்ளக்கடையில், வசிக்கும் மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும், மழை வளம் பெருகி, பஞ்சமின்றி வாழ்ந்திடவும் வேண்டி இந்த சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.