பதிவு செய்த நாள்
11
ஜூன்
2018
11:06
திருப்பூர்; திருப்பூரில், மழை வேண்டி ஆதிபராசக்தி கோவிலுக்கு, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தனர்.திருப்பூர் மாவட்டத்தில் மழை வளம் பெருகவும், இயற்கை வளம், நிலத்தடி நீர் வளம் மேம்படவும், விவசாயம், கால்நடை வளம் செழிக்கவும், மாவட்டத்தில் தொழில்துறை சீராக இயங்கவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.இந்த வேண்டுதல்களை முன்வைத்து, திருப்பூர் பிரிட்ஜ் வே காலனி பிரிவில் உள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடம் சார்பில், பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்தனர். புதுராமகிருஷ்ணாபுரம் ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து, தீர்த்தக்குடம் தயார் செய்து, சிறப்பு வழிபாடு நடத்திய பக்தர்கள், மேல் மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்துக்கு எடுத்து வந்தனர். தீர்த்தக்குடம் எடுத்து வந்த பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.