அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு
பதிவு செய்த நாள்
11
ஜூன் 2018 11:06
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்கு, கூடுதலாக, 22 ஆயிரத்து, 500 பாதுகாப்பு படை வீரர்கள் தேவைப்படுவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
பனி லிங்கம் : ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், அமர்நாத் குகையில், ஆண்டுதோறும், ஜூன் - ஆகஸ்ட் மாதத்தில், இயற்கையாக பனி லிங்கம் தோன்றுவது வழக்கம். இதை தரிசிக்க, நாடு முழுவதும் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை, ஜூன், 28ல் துவங்குகிறது. கடந்த வாரம், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான, ராஜ்நாத் சிங், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.அப்போது, அமர்நாத் யாத்திரையின் போது, பல அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என, அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார்.
கண்காணிப்பு : இந்நிலையில், மாநில போலீசார், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்கு, கூடுதலாக, 22 ஆயிரத்து, 500 பாதுகாப்பு படை வீரர்களை எதிர்பார்ப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து, இந்தாண்டு அமர்நாத் யாத்திரையின் போது, 40 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமரா, சேட்டிலைட் உள்ளிட்டவை பொருத்தி, அதன் மூலம் யாத்திரை மேற்கொள்பவர்களை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
|