பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
திருநெல்வேலி : நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று 102 நாதஸ்வர, தவில் கலைஞர்களின் மெகா இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 22ம் தேதி வரை மகதி, வீரமணிராஜூ பக்தி இன்னிசை, நெல்லை கண்ணன் சுழலும் சொல்லரங்கம் நடக்கிறது. இதுகுறித்து ஐவுளி வியாபாரிகள் மகமை சங்கத் தலைவர் சொனா வெங்கடாச்சலம் கூறியதாவது: நெல்லை ஐவுளி வியாபாரிகள் மகமை சங்கத்தின் சார்பில் கடந்த 140 ஆண்டுகளாக காந்திமதி அம்பாள் சமேத சுவாமி நெல்லையப்பர் கோயிலில் பத்ர தீபத் திருவிழா கட்டளை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் பத்ர தீபத் திருவிழாவை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நெல்லை கல்சுரல் அகடமியுடன் இணைந்து இசை திருவிழாவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (19ம் தேதி) மாலை 6 மணிக்கு நெல்லை மாவட்ட மங்கள இசைக் கலைஞர்களின் மாபெரும் மங்கள இசை முழக்கம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 51 நாதஸ்வரம், 51 தவில் கலைஞர்கள் என மொத்தம் 102 பேர் பங்கேற்று 4 ரதவீதிகளிலும் நாதஸ்வர, தவில் இசை நிகழ்ச்சி நடத்துகின்றனர். தொடர்ந்து கோயில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் நாதஸ்வர, தவில் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 20ம் தேதி மாலையில் சென்னை மகதி குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரியும், 21ம் தேதி சென்னை வீரமணிராஜூ பக்திப் பாடல்கள் இன்னிசை கச்சேரியும், 22ம் தேதி நெல்லை கண்ணனின் மாபெரும் சுழலும் சொல்லரங்கமும் நடக்கிறது.
22ம் தேதி பத்ர தீபத்திருவிழாவின் போது காலை 9 மணிக்கு 11 வெள்ளிக் குடங்களில் பால்குடம் எடுத்து ரதவீதிகளில் திருவீதியுலா வந்து பகல் 12 மணிக்கு அம்பாள் கோயில் ஊஞ்சல் மண்டபத்தை வந்தடையும். தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளுக்கு 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதியில் நந்தி தீபம் மற்றும் பத்ர தீபம் ஏற்றப்படும். கோயில் பிரகாரங்களிலும் தீபங்கள் ஏற்றப்படும். பத்ர தீபத் திருவிழாவின் கலை நிகழ்ச்சிகள் நெல்லையப்பர் கோயில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் ஐவுளி வியாபாரிகள் மகமை சங்கத் தலைவர் கணபதியாபிள்ளை தலைமையில் துவங்குகிறது. செயலாளர் சொனா வெங்கடாச்சலம், உதவித்தலைவர் வெங்கட்ராமன் முன்னிலை வகிக்கின்றனர். 22ம் தேதி மாலை 5 மணிக்கு நாதஸ்வர வித்வான்கள் காஞ்சிபுரம் பி.ஜி.காளிதாஸ், நாஞ்சில் என்.கே.ராம்தாஸ், அடையாறு செந்தில் குமார், டி.எஸ்.பிரபு குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லை கல்சுரல் அகடமி தலைவர் எம்.ஆர்.குணசேகரன், செயலாளர் காசிவிஸ்வநாதன் மற்றும் ஐவுளிக் கடை மகமை சங்க நிர்வாகிகள் இணைந்து செய்துள்ளனர். பேட்டியின் போது கல்சுரல் அகடமி தலைவர் குணசேகரன், ஐவுளி வியாபாரிகள் சங்க உதவித்தலைவர் வெங்கட்ராமன் உடனிருந்தனர்.