பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
திருமலையில் தங்கும் விடுதிகளின் கட்டணத்தை உயர்த்த, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: திருமலையில் சூராபுரம் தோட்டம் பகுதியில் உள்ள சிறப்பு நிலை தங்கும் விடுதிகள், 60 வரை உள்ளன. பாஞ்ச ஜன்யம் வளாகத்தில், 386 அறைகள் உள்ளன. இந்த விடுதிகளில் தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு அறைக்கு கட்டணமாக, 300 ரூபாயும், டிபாசிட் கட்டணமாக 350 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. புதியதாக கட்டப்பட்ட கவுஸ்துபம் வளாக அறைகளுக்கு, கட்டணமாக 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விடுதிகளில் சிறப்பான வசதிகள் உள்ளதால், அரசு ஊழியர்கள், தேவஸ்தான ஊழியர்கள் இங்கு தங்குவதையே விரும்புவதால், இந்த அறைகளுக்கு எப்போதும் கடும் போட்டி நிலவுகிறது. மின்சார கட்டணம், தண்ணீர் சப்ளைக்கான கட்டணம் உயர்ந்துள்ளதால், இந்த விடுதிகளின் கட்டணத்தை அதிகரிக்க தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்தனர். இதையடுத்து, சிறப்பு நிலை விடுதிகளின் கட்டணத்தை 400 ரூபாயிலிருந்து, 750 ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிபாசிட் தொகை, 750 ரூபாய் வசூலிக்கப்படும். பாஞ்சஜன்யம் வளாக அறைகளின் வாடகை கட்டணம் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இந்த அறைகளுக்கு டிபாசிட் தொகையாக 500 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த இரு விடுதிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம், தேவஸ்தான நிர்வாகத்திற்கு நாள் ஒன்றுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். இவ்வாறு தேவஸ்தான அதிகாரிகள் கூறினர்.
பக்தர்களுக்கு கிடைக்குமா : சூராபுரம் தோட்டம் மற்றும் பாஞ்ச ஜன்யம் வளாகத்தில் உள்ள அறைகள் பெரும்பாலும் பக்தர்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இங்குள்ள அறைகளை தேவஸ்தானத்தில் உள்ள ஊழியர்களே புக்கிங் செய்து, அதை கைமாற்றி அதிக வாடகைக்கு விடுகின்றனர். ஒரு நாள் புக்கிங் செய்து இரண்டு, மூன்று நாட்களுக்கு பலரிடம் வாடகைக்கு விட்டு நல்ல காசு பார்த்து விடுகின்றனர். இதில் , நடக்கும் முறைகேட்டை தேவஸ்தான அதிகாரிகள் கண்காணித்து, திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, சி.ஆர்.ஓ., ஆபீசுக்கு முன் உள்ள கவுண்டரில் எளிதாக கிடைக்கும்படி செய்ய வேண்டும். அறை வாங்குவதற்காக இந்த கவுண்டரில் நிற்கும் பக்தர்களுக்கு, 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய் வாடகையுள்ள அறைகளே பெரும்பாலும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தரிசன டிக்கெட் வழங்குதில் வெளிப்படையான அணுகுமுறை உள்ளது போல், வாடகை அறைகள் ஒதுக்கீடு செய்வதிலும் வெளிப்படையான அணுகுமுறை இருக்கவேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.