பாரதப் போர் நடைபெற்ற சமயம் அபிமன்யூவை சயந்திரன் எனும் மன்னன் கொன்றான். இதனால் கோபம் கொண்ட அர்ச்சுனன் என் மகனைக் கொன்றவனை நாளை மாலைக்குள் வீழ்த்துவேன் அல்லவெனில் உயிர் மாய்ப்பேன் என சபதம் செய்தான். அப்போது மைத்துனனும், தேரோட்டியும், தோழனுமான கண்ணன் அவனைத் தனியாக அழைத்துச் சென்று தேற்றினான். பின் அர்ச்சுனன் பசியாற கனிகளைப் பறித்து கொடுத்தான். அவனும் நான் தினமும் சிவபெருமானை பூஜிக்காமல் உண்ணமாட்டேன் என்றான். கண்ணன் இன்று என்னையே சிவனாக எண்ணி பூஜிப்பாயாக என்றான். அர்ச்சுனன்னும் அவ்வாறே பூஜித்து பசியாறினான். பின் சிறிது கண் அயர்ந்தான். அவனது கனவில் கண்ணன் வந்தான், வந்து மைத்துனா ! சிந்து மன்னனை அழிக்க நாம் கையிலை சென்று சிவனை வணங்கி சூரிய உதயத்திற்கு முன் வந்து விட வேண்டும் என்றான். இருவரும் கையிலை சென்றனர். சிவபெருமான் பார்வதியை வணங்கி தாங்கள் வந்த விவரத்தைக் கூறினர். சிவபெருமான் அருகே அர்ச்சுனன் அர்ச்சித்த மலர்கள் இருந்தன. இதனைக் கண்ட அர்ச்சுனன் மகிழ்ந்தான். பின்னர் சிவபெருமான் தடாகத்திலிருந்து எதிரியை அழிக்க வல்ல பாசுபதத்தை கொடுத்து (முஷ்டி நிலை என்பது நினைவாலும் மறவாத தன்மை) இருவரும் சிவபெருமானுக்கு நன்றி கூறி வணங்கினர்.
சிவபெருமானும் பாரதப் போரில் வெற்றி உண்டாக வாழ்த்தினார். உடன் இருவரும் சிவபெருமானை வலம் வந்து தங்கள் நினைவுலகம் வந்து சேர்ந்தனர். அர்ச்சுனன் இவ்வாறு கனவு கண்டு உடன் கண் விழித்துப் பார்க்கையில் தன்னுடைய அம்பறாத்தாணியில் புது வகையான அம்பு அதாவது பாசுபதம் இருப்பதைக் கண்ட அர்ச்சுனன் மீண்டுமொரு முறை சிவபெருமானையும், கண்ணனையும் வணங்கினான். அர்ச்சுனனும் அன்றே சிவபெருமான் கொடுத்த பாசுபதத்தினால் சயந்திரனைக் கொன்று சபதத்தை நிறைவேற்றினான். கண்ணனும், அர்ச்சுனனும் வேண்டிய வண்ணம் பாசுபதத்தை அருளிய நிலையிலுள்ள மூர்த்தமே பாசுபத மூர்த்தி யாகும். குடவாசல் அருகே உள்ளது கொள்ளம்புதூர். இங்குள்ள இறைவன் பெயர் வில்வவனநாதர், இறைவி பெயர் சௌந்தர நாயகி என்பதாகும். இத்தல இறைவனை நாள்தோறும் வணங்கினால் பிறவிப் பெருங்கடல் நிந்தி இறைவனை அடையலாம்.சிவப்பு நிற மலர் அர்ச்சனையும், மஞ்சளன்ன நைவேத்தியமும், வியாழன், செவ்வாய் கிழமைகளில் கொடுக்க எதிரி நீங்குவர், கடன் தொல்லைத் தீரும். மேலும் இங்குள்ள இறைவனை கும்பநீரால் அபிஷேகம் செய்ய பிறவிப் பயன் எய்துவர்.