பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
அன்னூர் : அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலின், தெற்கு வாசல் மூடப்பட்டது குறித்து, உதவி ஆணையர் விசாரணை நடத்தினார். அன்னூர் மன்னீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டு பழமையானது. மேற்றலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம், தேரோட்டம் நடக்கிறது. கோவிலில் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் வாசல்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், கோவிலின் மேற்கு வாசலில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. பக்தர்களில் ஒரு பிரிவினரின் கோரிக்கைக்கு ஏற்ப, கடந்த மாதம் கோவிலின் தெற்கு வாசல் அடைக்கப்பட்டது. ராஜகோபுரம் அமைந்துள்ள மேற்கு வாசல் மட்டும் திறக்கப்பட்டது. ஒரு வாசல் மூடப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களில் ஒரு பிரிவினர், இந்துசமய அறநிலையத்துறை, கோவை கலெக்டருக்கு மனு அனுப்பினர். அதன் விவரம்: மதுரை, திருவண்ணாமலை உள்பட பழமையான கோவில்களில், அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, தன்னிச்சையாக தெற்கு வாசல் மூடப்பட்டுள்ளது. மேற்கு வாசலின் எதிர்ப்புறம் வீடுகள் இல்லை. குளக்கரை மட்டுமே உள்ளது. அதிகாலையில் கோவிலுக்கு வரும் பெண்களுக்கு, மேற்கு வாசலில் பாதுகாப்பு இல்லை. எனவே, தெற்கு வாசலை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரி இருந்தனர். இந்த மனுவையடுத்து, இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர், மன்னீஸ்வரர் கோவிலுக்கு வந்தார். கோவில் ஊழியர்களிடம், கோவிலின் தெற்கு வாசலை மூட, அறநிலையத்துறை அனுமதி பெறாதது ஏன்? எந்த அடிப்படையில் கோவில் தெற்கு வாசல் மூடப்பட்டது? என்று விசாரித்தார். உயரதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.