பதிவு செய்த நாள்
19
ஜன
2012
11:01
மேட்டுப்பாளையம் : குட்டையூர் மாதேஸ்வரன் மலையை சுற்றியும், திருவண்ணாமலையில் இருப்பதை போல், "கிரிவலப்பாதை அமைக்க கோவில் கமிட்டியினர், முடிவு செய்துள்ளனர். மேட்டுப்பாளையம்- காரமடை ரோட்டில், குட்டை யூரில் மாதேஸ்ரன் மலையில், சிவன் கோவில் உள்ளது. இது, இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் என்றாலும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்து வந்தது. கிரிவலக்கமிட்டி என்ற அமைப்பை உருவாக்கிய முக்கிய பிரமுகர்கள், மலையை சுற்றியும் "கிரிவலம் செல்ல பாதை அமைத்தனர். அதில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலக் கமிட்டியினர் கூறியதாவது: கடந்தாண்டு, இக்கோவிலில் கிரிவலம் துவங்கியபோது, 200 பேர் மலையை சுற்றி வந்தனர். அதன் பின்பு, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும்,பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக நன்கொடை பெற்று, மலையை சுற்றி ஒன்னேகால் கி.மீ., தூரத்துக்கு, ரோடு போடும் பணி, வரும் 26ம் தேதி துவக்கப்படும். இதில் எட்டு இடங்களில் மண்டபம் அமைத்து, அதில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்யப்படும். காரமடை ரோட்டிலிருந்து கோவில் வரை, தார் ரோடு போடப்படும். திருவண்ணாமலையில் உள்ளது போல், இந்த மாதேஸ்வரன் மலையிலும், நாங்கள் மலை மீது ஒரு வாரம் மகா தீபம் ஏற்றி வழிபட்டோம். தற்போது, கிரிவலம் வரும் பக்தர்களுக்கு குடிநீரும், அன்னதானமும், கமிட்டி சார்பில் வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.