கஷ்டப்படுவோரில் பலர் அதில் இருந்து மீள்வது பற்றி சிந்திக்காமலும், கடவுளிடம் வேண்டாமலும் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஒரு குடும்பத்தில் கஷ்டம் தாண்டவம் ஆடியது. அந்தக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அருகிலுள்ள கடைக்கு போய் கடனுக்கு பொருள் கேட்டால் உரிமையாளர் முகம் திருப்பிக் கொள்வார். இதையும் மீறி, ஒருநாள் அந்த குடும்பத்திலுள்ள சிறுவன் பசி தாங்காமல் ஒரு ரொட்டி கடன் கேட்டான். வியாபாரியோ பையனுக்கு திருட்டுப் பட்டம் கட்டி உதைத்து அனுப்பினான். இதைத் தாங்க முடியாத குடும்பத்தலைவி சிறுவனுடன் தற்கொலைக்கு முயன்றாள்.அதைப் பார்த்த பக்கத்து வீட்டுப்பெண், “இது கோழைத்தனம்! கஷ்டம் வந்தால் போராட வேண்டும். நான் கணவனை இழந்தவள். இரண்டு குழந்தைகளை வளர்க்க வீடுகளில் பாத்திரம் தேய்க்கிறேன். கிடைப்பதைக் கொண்டு சாப்பிடுகிறேன். என்றேனும் ஆறுதல் கிடைக்குமென்ற நம்பிக்கையில் இயேசு விடம் தொடர்ந்து ஜெபிக்கிறேன். பைபிளில் சொல்லப்பட்டுள்ள வசனம் ஒன்றை வாசிக்கிறேன் கேள்! ‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் ஜெபத்தினாலும், வேண்டுத லினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்’என்று சொல்லப் பட்டிருக்கிறது.
உங்கள் கஷ்டத்தை கடவுளிடம் விட்டு விடுங்கள்! உன் கணவனும், நீயும் சேர்ந்து உழையுங்கள். குழந்தைகளைக் காப்பாற்றுங்கள். எந்த வேலை என சிந்திக்காதீர்கள். கிடைத்த வேலையைச் செய்து, அந்த வருமானத்தில் காலம் கழியுங்கள். தேவன் நன்மையை தருவார்” என்றாள். ஆம்... இன்பம், துன்பம் இரண்டுமே கடவுளால் தரப்படுபவை. அவற்றை ஏற்று துன்பம் குறைய அவரை ஜெபிக்க வேண்டும். அவர் வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதற்கு நம்பிக்கை வேண்டும்.எந்த செயலை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். நம்பிக்கையின்றி செய்யும் எந்தச் செயலும் வெற்றியடையாது. நம்பிக்கையுடன் செயலாற்றினால் வெற்றியில் பாதியை கொடுத்து விடுகிறது. இது பற்றி இயேசுநாதர் சொல்லும் பொன்மொழிகள்: * நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும், உறுதியும் கொண்டிருங்கள். * நம்பிக்கை இல்லாத இதயமுள்ளவன் கடவுளை விட்டு விலகியிருக்கிறான்.