பந்தலூர் : பந்தலூர் மழவன் சேரம்பாடி சாமியார் மலை உச்சியில் பாதுகாப்பற்ற முறையில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் செல்வதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கூடலூர், பந்தலூர் பகுதியில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள பகுதியாக பந்தலூர் அருகேயுள்ள சேரங்கோட்டை சாமியார் மலை உள்ளது. கொளப்பள்ளி-அய்யன்கொல்லி சாலையில் மழவன் சேரம்பாடி பகுதியிலிருந்து சுமார் 300 அடி உயரமுள்ள மலை உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணானந்தகிரி ஆசிரமம் அமைக்கப்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி முதல் தேதியன்று சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். பூஜையில் பந்தலூர் தாலுகாவை சேர்ந்த பல்வேறு பகுதிகளிலிருந்தும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பது வழக்கம். ஆசிரமத்திற்கு சென்று பூஜையில் பங்கேற்கும் பக்தர்கள் பூஜை முடிந்ததும் மலை உச்சிக்கு சென்று ஆபத்தான நிலையில் காணப்படும் பாறைகளில் ஓடி விளையாடுவது, இறங்கி செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். பாறையின் கீழ் பகுதியில் சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் உள்ளதுடன், நிலை தடுமாறி விழுந்தால் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையும் ஏற்படும். எனவே, இனி வரும் காலங்களில் மலை உச்சியிலுள்ள பாறைக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடன் நடந்துக்கொள்ள தேவையான விழிப்புணர்வை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.