பதிவு செய்த நாள்
26
ஜூன்
2018
01:06
அன்னுார்: குன்னத்துாராம்பாளையத்தில் பழமையான சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு செல்வ விநாயகர், பாலமுருகர் சன்னதிகளும் உள்ளன. பல லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா, கடந்த, 22ல் துவங்கியது. 23ல் திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, முதற்கால வேள்வி பூஜை நடந்தது. 24ம் தேதி காலை கலசங்கள் கோபுரங்களில் நிலை நிறுத்தப்பட்டன. மதியம் செண்டை மேள இசை நிகழ்ச்சி, மாலையில் வேள்வி பூஜை நடந்தது. நேற்று அதிகாலை வேள்விசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய குடங்கள் கோவிலை வலம் வந்தன. காலை, 6:30க்கு, செல்வ விநாயகர், சக்தி மாரியம்மன், பாலமுருகர் ஆகிய தெய்வங்களுக்கு, பேரூர் இளைய பட்டம் மருதாசல அடிகள் தலைமையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.தமிழ்முறைப்படி வேள்வி பூஜை செய்யப்பட்டது. பின், மோளகாளிபாளையம் குழு காவடியாட்டம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.