பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
குருவாயூர்: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலின் மூன்று யானைகளுக்கு, செயற்கை தந்தம் பொருத்த முடிவு செய்யப்பட்டு, முதல்கட்டமாக ஒரு யானைக்கு பொருத்தப்பட்டுள்ளது. கேரளா திருச்சூர் மாவட்டம் குருவாயூரில், பிரசித்திப் பெற்ற கிருஷ்ணன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது, 63 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், ராமு, ராஜகேசரன் மற்றும் சந்திரசேகரன் ஆகிய மூன்று யானைகளும் அடக்கம். இவை ஒவ்வொன்றுக்கும், தற்போது தலா ஒரு தந்தம் மட்டுமே உள்ளது.ஆனால், யானைகளை சுவாமி வீதி உலாவுக்கு கொண்டு செல்லும்போது, அவற்றிற்கு, இரு தந்தங்கள் இருக்க வேண்டும் என்பது நியதி. அதனால், இரு தந்தங்கள் இல்லாத இந்த மூன்று யானைகளுக்கும், செயற்கை தந்தங்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, ராமு என்ற யானைக்கு செயற்கை தந்தம் பொருத்தப்பட்டது.திருச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில், செயற்கை இழையிலான தந்தம் உருவாக்கப்பட்டது. இத்தந்தத்திற்கான செலவை, கிச்சா என்ற யானை ரசிகர் ஏற்றுக் கொண்டுள்ளார். தந்தம் நேற்று, ராமுவிற்கு பொருத்தப்பட்டது. தொடர்ந்து, எடமுட்டம் பகவதி கோவிலில், இன்று நடைபெறும் சுவாமி புறப்பாட்டில் அலங்கரிக்கப்பட்ட ராமு, இரு தந்தங்களுடன் கம்பீரமாக பவனி வர உள்ளது. மீதமுள்ள ராஜசேகரன் மற்றும் சந்திர சேகரன் ஆகிய இரு யானைகளுக்கும், இரண்டாவது கட்டமாக செயற்கை தந்தம் பொருத்தப்படும்.