பதிவு செய்த நாள்
04
ஜூலை
2018
12:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகாவில், ஐ.கொத்தப்பள்ளி கிராமத்தில், ரஞ்சித்சிங் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில், 500 ஆண்டுகள் பழமையான நடுகற்களை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் வெங்கடேஷ்வரன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து, பேராசிரியர் வெங்கடேஷ்வரன் கூறியதாவது: போச்சம்பள்ளி தாலுகாவில், கள ஆய்வு மேற்கொண்ட போது, 500 ஆண்டுகள் பழமையான இரண்டு அரிய வகை நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு நடுகல்லில் வீரன் ஒருவன், திருசின்னம் என்ற இசைக் கருவியை தனது இடது கையில் பிடித்தபடியும், மற்றொரு நடுகல்லில், பன்றியுடன் சண்டையிட்டபடி மரணம் அடைந்தவருக்கு எடுக்கப்பட்டதாகும். இந்த வீரன் இசைக்கலைஞராகவும், போர்வீரனாகவும் இருந்திருக்கலாம். வீரனின் வலது விலாப்பகுதியில், எய்யப்பட்டுள்ள அம்பு, இடதுபுறமாக வெளிவந்துள்ளது. இதன் மூலம் போரில் அம்பு எய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளான் என்பது தெரிய வருகிறது. வீரனின் வலது கையில் கத்தியும், இடது கையில் திருச்சின்னம் என்ற இசைக்கருவியும் உள்ளது சிறப்பாகும். அதே இடத்தில், இந்த நடுகல்லிற்கு இடது புறத்தில், மற்றொரு பன்றிக்குத்திப்பட்டான் நடுகல் உள்ளது. இவ்வீரனின் வலது கையில் கத்தியும், இடது கையில் வில்லும் உள்ளது. வீரனின் இடது காலின் மூட்டுப்பகுதியை, பன்றி ஒன்று கடித்தவாறு உள்ளது. பன்றியின் முதுகிற்கு கீழ் பகுதியில் இரு அம்புகள் பாய்ந்துள்ளன. இதன் மூலம் வீரனுக்கும், பன்றிக்கும் இடையே நடந்த போரில் பன்றியும், வீரனும் இறந்துள்ளனர் என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் என்று கூறினார்.