பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
முருகன் கோவிலின் உபகோவில்களில், எட்டு கோவில்களுக்கு ஓராண்டுக்குள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த திருத்தணி தேவஸ்தானம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் கட்டுப்பாட்டில், 29 கோவில்கள் உள்ளன. இக்கோவில்களை பராமரிப்பது முதல் வரவு-செலவு கணக்குகளையும் கோவில் நிர்வாகம் கவனித்து வருகிறது. கோவில்களுக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும். ஆனால், 10க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளாகியுள்ளன. குறிப்பாக, காஞ்சிபுரம் அடுத்த, கூரம் வித்யாவனித் பல்லவ பரமேஸ்வரசிவன் கோவில், திருத்தணி நந்தி ஆறு அருகில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி, வீரபத்திர சுவாமி, விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி - கன்னிகாபுரம் சாலையில் உள்ள சப்தகன்னியம்மன், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், வளர்புரம் திருநாகேஸ்வர சுவாமி கோவில் மற்றும் திருவாலங்காடு ராமபக்த ஆஞ்சநேயர் சுவாமி ஆகிய, எட்டு கோவில்களுக்கு 1995ம் ஆண்டுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. உப கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக இந்து அறநிலையத் துறை மற்றும் முருகன் கோவில் நிர்வாகத்திடம் பக்தர்கள் கோரி வந்தனர். இதையடுத்து, திருத்தணி முருகன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த, தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து முருகன் கோவில் இணை ஆணையர் தனபால் கூறும்போது, ""முதற்கட்டமாக, திருத்தணியில் உள்ள, ஐந்து உபகோவில்களுக்கும், கூரம், திருவாலங்காடு, வளர்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள, மூன்று கோவில்களுக்கும் ஓராண்டுக்குள் திருப்பணிகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். இதற்கான மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. அதன்பிறகு திருப்பணிகள் துவங்கி ஓராண்டுக்குள் முடிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படும், என்றார்.