பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
சிதம்பரம் : தை அமாவாசையையொட்டி சிதம் பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். அமாவாசை நாட்களில் தாய், தந்தையரை இழந்தவர்கள், தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையர்களை நினைத்து விரதம் இருந்து, படையல் செய்து வழிபடுவது வழக்கம். தை மாத அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் ஒரு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் அனைத்து நீர் நிலைகளிலும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. நேற்று சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகங்கை குளத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். வெளியூர்களில் இருந்தும் அதிகமானோர் வந்திருந்தனர். இதனால் குளக்கரையில் காலை முதல் மாலை வரை கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
கடலூர்: தேவனாம்பட்டினம் கடற்கரை, மஞ்சக்குப்பம் பெண்ணையாறு, விருத்தாசலம் மணிமுக்தா ஆற்றில் நீராடி, அங்குள்ள புரோகிதர்களைக் கொண்டு தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். திதி கொடுப்பவர்கள், புரோகிதர்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்களை தானம் கொடுப்பார்கள். அவ்வாறு முடியாதவர்கள், பசுவிற்கு பிடித்த அகத்தி கீரையை கொடுத்தாலே, புரோகிதர்களுக்கு தானம் கொடுத்ததற்கு ஈடாகும் என அகத்திக்கீரை கொடுப்பார்கள். இதனால் நேற்று அகத்தி கீரைக்கு ஏக கிராக்கி நிலவியது. கடந்த 30ம் தேதி வீசிய "தானே புயலில் அகத்திக் கீரை மரங்கள் அனைத்தும் முறிந்து விட்டதால், வெளி மாவட்டங்களில் இருந்து அகத்திக் கீரை நேற்று ஒரு கட்டு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையானது.