பதிவு செய்த நாள்
23
ஜன
2012
12:01
திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் , "தை அமாவாசையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இறைவனை தரிசித்தனர். உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்கள் சிறப்பு நாட்களாகும். ஆடி மற்றும் தை பட்ட சாகுபடியை துவக்குவதற்கு முன்பு விவசாயிகளை அமாவாசை தினத்தில் மாட்டு வண்டிகளுடன் வந்து மும்மூர்த்திகளை தரிசித்து விட்டு, சாகுபடி பணிகளை துவக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தை அமாவாசை தினமான நேற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள், நூற்றுக்கணக்கான வண்டி மாடுகளில் நேற்றுமுன்தினம் இரவு முதலே திருமூர்த்தியில் குவியத் துவங்கினர். நேற்று அதிகாலை 4.30 மணிக்கு, நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இதையொட்டி பலர் முன்னோர்களுக்கு பாலாற்றின் கரையில் திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். பக்தர்களின் வசதிக்காக, உடுமலையிலிருந்து திருமூர்த்தி மலைக்கு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதிகளிலுள்ள கோவில்களில், தை அமாவாசையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலை 10.00 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அலங்கார பூஜையும், கோவை ரோட்டிலுள்ள மாகாளியம்மன் கோவிலில் காலை 6.00 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஐயப்பன் கோவிலில் காலை 4.00 மணிக்கு திருமஞ்சன அபிஷேகமும், காலை 8.30 மணிக்கு அய்யப்பனுக்கு தங்ககவசம் சார்த்தப்பட்டு, சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றன. சூலக்கல் மாரியம்மன் கோவிலில் காலை 6.00 மணிக்கு அபிஷேக பூஜை, மகா தீபாராதனை இடம்பெற்றது. பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தை அமாவாசையையொட்டி பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளிலுள்ள கோவில்களில் இதையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதுதவிர, ஆற்றோரங்களில் முன்னோர்களுக்கு "திதி கொடுத்தும், மக்கள் வழிபட்டனர். இதனால், அம்பராம்பாளையம் ஆற்றங்கரையோரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சிறப்பு பஸ் இயக்கம்: தை அமாவாசையையொட்டி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்றதால் பொள்ளாச்சி - ஆனைமலை வழித்தடத்தில் நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், வழக்கமான கட்டத்தை விட கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரித்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர். தொடர்ந்து, இன்று குண்டம் விழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கவுள்ளதால், ஆனைமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றும் பொள்ளாச்சி - ஆனைமலை வழித்தடத்தில் சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அமாவாசை வழிபாடு: நேற்று அமாவாசை மற்றும் விடுமுறை நாள் என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்று வழிபட்டனர். 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வெளியிலும் வெயிலையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் கூட்டம் அலைமோதியது. சிறப்பு தரிசன வழியிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
கண்காணிப்பு காமிரா: மாசாணியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால் பாதுகாப்பு கருதி 12 கண்காணிப்பு காமிராக்கள் கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போலீஸ் பாதுகாப்பு: நேற்று அமாவாசை தினத்திற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வந்ததால் பாதுகாப்பிற்காக டி.எஸ்.பி., பழனிச்சாமி தலைமையில் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை மாசாணியம்மன் கோவில் தக்காரும், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் துணை ஆணையருமான வீரபத்திரன், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர்கள் செந்தமிழ்செல்வன், சேகர், உதவிப்பொறியாளர் ராஜேந்திரன், கோவில் பணியாளர்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.