பதிவு செய்த நாள்
05
ஜூலை
2018
12:07
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு இரவு நேரத்தில் அரசு பஸ் சர்வீஸ் இல்லாததால், பக்தர்கள் அவதிபடுகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் 30 ஆயிரம் வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பெரும்பாலும் பக்தர்கள் அரசு பஸ்சில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கி, அங்கிருந்து அதிகாலை 5:30 முதல் இரவு 10:00 மணி வரை செல்லும் அரசு பஸ்சில் 7 ரூபாய் கட்டணத்துடன் கோயிலுக்கு செல்கின்றனர். இரவு 10:00 மணிக்கு பிறகு டவுன் பஸ் சர்வீஸ் இல்லாததால் வெளி மாநிலம், மாவட்டத்தில் இருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல பஸ் வசதி இன்றி, ரூபாய் 100 கொடுத்து ஆட்டோவில் செல்லும் நிலை உள்ளது. இதனால் சில பக்தர்கள், பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயிலுக்கு நடந்து செல்லும் போது திருடர்களிடம் உடமைகளை பறிகொடுக்கும் அவலம் உள்ளது. இதனை தவிர்க்க, 2008 ல் இரவு 10:00 மணிக்கு பிறகு வெளியூரில் இருந்து ராமேஸ்வரம் வரும் அனைத்து டிப்போ பஸ்களும், கோயில் வாசல் வரை செல்ல அப்போதய கலெக்டர் உத்தரவிட்டார். இதனை ராமேஸ்வரம் டிப்போ தவிர, பிற மாவட்ட அரசு டிப்போ பஸ் டிரைவர்கள், நடத்துனர்கள் கோயிலுக்கு செல்வதை தவிர்த்து, பயணிகளை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடுகின்றனர். பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வலியுறுத்தியும் பலனில்லை. இதனால் பக்தர்கள் நள்ளிரவில் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கும் அவலம் உள்ளதால், இரவில் அனைத்து டிப்போ பஸ்களும் கோயில் வாசல் வரை செல்ல கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.