புதுச்சேரி: புதுச்சேரி அருங்காட்சியகத்தில் குப்பையோடு குப்பையாக வீசப்பட்டுள்ள பழங்கால கற்சிலைகளை பாதுகாக்க வேண்டும். புதுச்சேரி அருங்காட்சியகம், கவர்னர் மாளிகை பக்கத்தில் உள்ளது. இங்கு, புதுச்சேரி மாநிலம் முழுவதும் கிடைத்த அரிய சோழர் கால ஐம்பொன் சிலைகள், அரிக்கன்மேட்டில் கிடைத்த மணிகள், பழங்கால கற்சிலைகள், பிரெஞ்சு காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், பழங்கால நாணயங்கள், கற்கால கருவிகள், பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்த அரசர்கள் மற்றும் ஆங்கிலேய ஆட்சி கால நாணயங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சிறப்புமிக்க இந்த இடத்தில் சுத்தம் செய்யும் பணியின்போது, குப்பையோடு குப்பையாக பழங்கால கற்சிலைகளும் வீசப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கற்சிலைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.