சாத்துார் சிவன் தெப்பக்குளத்தை சீரமையுங்க: பக்தர்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2018 11:07
சாத்துார்: சாத்துார் சிவன் தெப்பக்குளத்தை சீரமைத்து தண்ணீர் தேக்கிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோவில் 800 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.புராதனமிக்க இக்கோவில் தெப்பக்குளம் கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல், தண்ணீர் தேங்காமல் உள்ளதால் பக்தர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
சிவன் கோவில் தெப்பத்திற்கு சாத்துார் மரிய ஊரணியில் இருந்து தண்ணீர் வந்தது. ஆனால் காலப்போக்கில் தண்ணீர் வரும பாதையை அடைத்து கட்டடங்கள் கட்டப்பட்டதால் தெப்பத்திற்கு தண்ணீர் வருவது தடை பட்டது. தெப்பம் அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தும், முக்குராந்தல் பகுதியில் இருந்தும் மழை பெய்யும் தெப்பத்திற்கு தண்ணீர் வந்தடையும் வகையில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் குழாயில் மண் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தெப்பத்திற்கு வரவில்லை. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வைப்பாற்றில் தனியாக கிணறு அமைத்து குழாய் மூலம் தண்ணீர் பம்பிங் செய்து தெப்பத்தில் தண்ணீர் தேக்கப்பட்டு திருவிழா நடந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக தெப்பத்தில் தண்ணீர் தேக்காமல் விட்டு விட்டனர். மோட்டார் பழுது என காரணம் கூறி அதிகாரிகள் பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர். தெப்பத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் தேங்குவதன் மூலம் நான்கு ரத வீதி, நாடார் கீழத்தெரு உள்ளிட்ட குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் மகிழ்ச்சியடைவார்கள். எனவே அதிகாரிகள் தாமதம் செய்யாமல் தெப்பத்தில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.