பதிவு செய்த நாள்
09
ஜூலை
2018
12:07
புதுடில்லி: ராமாயணத்துடன் தொடர்புள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்லும் வகையில், ரயில்வே துறை, நவ., 14 முதல், 16 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்க திட்டமிட்டுள்ளது.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ராமாயணத்துடன் தொடர்புடைய, அயோத்தி முதல், இலங்கையின் கொழும்பு வரையிலான இடங்களுக்கு, ராமேஸ்வரம் வழியாக, நவ., 14ல், சிறப்பு ரயில் இயக்கப்படும். டில்லியில் இருந்து புறப்படும் இந்த ரயில், 16 நாட்கள், பயணியரை சுற்றுலா அழைத்து செல்லும்.இந்த ரயிலில், 800 பேர் பயணிக்கலாம். சுற்றுலாவின் கடைசி கட்டமாக இலங்கை செல்ல விரும்புவோர், சென்னையில் இருந்து விமானம் மூலம் செல்லலாம்.சிறப்பு ரயிலுக்கு, ஸ்ரீராமாயணா எக்ஸ்பிரஸ் என, பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள், இதற்கான பயண கட்டணம், ஒரு நபருக்கு, 15 ஆயிரத்து, 120 ரூபாய். ரயிலில் பயணியருக்கு உணவு வழங்கப்படும். சுற்றுலா தலங்களில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக அதிகாரிகள், பயணியரின் தேவைகளை கவனிப்பர்.டில்லி, சப்தர்ஜங் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில், முதல் பயணமாக, ராமரின் பிறந்த தலமான, அயோத்தியில் நிறுத்தப்படும். பின், நந்திகிராம், சீதாமர்கி, ஜனக்பூர், வாரணாசி, பிரயாக், சிறிங்கவேர்புர், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். ரயில் நிலையத்தில் இருந்து, சாலை வழியாக சுற்றுலா தலம் செல்வதற்கான ஏற்பாடுகளை, ரயில்வே கவனித்துக் கொள்ளும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.