பதிவு செய்த நாள்
24
ஜன
2012
10:01
பொள்ளாச்சி : பழநி பாதயாத்திரை பக்தர்கள் ரோட்டோரத்தில் அமைதியாக நடந்து செல்ல வேண்டும், ரோட்டோரத்தில் படுத்து உறங்க வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக செல்கின்றனர். அதேபோன்று கேரளா மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களும் பொள்ளாச்சி வழியாக பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். இதனால், பொள்ளாச்சியில் கோவை, பாலக்காடு, மீன்கரை, உடுமலை ரோடுகளில் பழநி பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பாதயாத்திரையை அதிகாலை 4.00 மணிக்கு துவங்கி, காலை 10.00 மணிக்குள் நிறைவு செய்து பகலில் ஓய்வு எடுக்கின்றனர். மாலை 4.00 மணிக்கு பாதயாத்திரையை துவங்கி இரவு 12.00 மணிக்கு நிறைவு செய்கின்றனர். பொள்ளாச்சி வழித்தடத்தில் செல்லும் பாதயாத்திரை பக்தர்கள் அனைவரும் தேசிய நெடுஞ்சாலையை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. பக்தர்கள் கும்பலாக செல்லும் பகுதிகளில் வாகனங்கள் மெதுவாக நின்று செல்கின்றன. இந்நிலையில் பாதயாத்திரை பக்தர்கள் விபத்தை தவிர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்று பொள்ளாச்சி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பக்தர்கள் கூட்டமாக செல்லும் இடங்களில் போலீசார் மைக் மூலம் அறிவுத்தல் விடுக்கின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு நேரத்தில் பெரும்பாலும் தார் ரோட்டில் நடந்து செல்கின்றனர். தை அமாவாசை நிறைவடைந்து விட்டதாலும், தைப்பூசம் பிப்., 7ம் தேதி வருவதாலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. ரோட்டில் வாகனங்களும் வேகமாக வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் ரோட்டோரத்தில் பாதயாத்திரை பக்தர்கள் ஓய்வு எடுக்கின்றனர். பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ரோட்டோரத்தில் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும். ரோட்டோர மர நிழலில் படுத்து தூங்கக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், அந்தந்த பகுதி போலீசாரும் இரவு ரோந்தின் போது, பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.