பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
02:07
பிடியதன் உருஉமை கௌமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவர்இடர்
கடிகணபதிவர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே
“திருஞானசம்பந்தர் தேவாரம்”
அனைத்து உலகினையும் மனம் கொண்டு ஆக்கியவன் ஆதிபரன், அருட்சோதியன் அவ்வெல்லாம் வல்ல இறைவன் யாவற்றிலும் நிறைந்திலங்கி யாதும் அவனாய், உணர்வோருக்கு உணர்த்துகின்ற உணர்ந்தோதற்கரியவனாய் ஒன்றுமுதற் பலவாகிய அறிவும் அதனதற்;கேற்ற தோற்றவகைகளாய் எண்பத்து நான்காயிரம் சீவராசிகளைப் படைத்தும் காத்தும் மறைத்தும் அருளாற்றுகிறான்.
அக்காரணன் ஏதோ காரியமாய்த் தோற்றம் மறைவென, இரண்டினிற்கிடையே “வாழ்வு” என்ற ஓர் நிகழ்வினை முடிவில்லாத் தொடராய் பொதுப்பண்பாய், காலவரையறையிற் கணக்கிட்டு; நிகழ்த்திக்கொண்டிருக்கின்றான். அக்கணக்கின் கருவூலமான காலப்பேழையின் சாலப்பெரும் வைப்புக்களில் பற்பல நிகழ்வுகள் வரலாற்றுக் காவியங்களாய் இதிகாச புராணங்களாய் இம்மண்ணிலும் அவ்விண்ணிலும் என்றென்றும் ஒளிவீசிய வண்ணமிருக்கின்றன.
அவற்றினை அன்றுதொட்டு இன்றளவில் பல்வேறு கோணங்களில் ஆழ்ந்தகழ்ந்து கண்டறிந்த அறிஞர்பெருமக்களின் கவின்மிகு சுவைப் பனுவல்களினின்றும் அடியவன் சிற்றாய்வுக்குட்ப் பட்டதைப் பொறுக்கிக் கோர்த்த இத்தகவல் முத்துமாலையை இம்மதுரைப் புராணக்காவியநாயகி நாயகர் ஸ்ரீ மீனாக்ஷி ஸ்ரீ சோமசுந்தரர் திருமுன் கொணர்ந்து அவர்தம் பாதங்கட்குப் பயம்கொண்ட இளம்கன்றாய்ப் பையவே வைக்கின்றேன்.
அழகற்ற ஒன்றிற்கு அணிகலனும் அலங்காரமும் ஒருவேளை அழகூட்டலாம். தமிழின் அழகிற்கு அழகூட்ட எதுவும் அவசியமற்றதாகும். அத்தகைய முயற்சி பகலவனுக்கு அகல்விளக்கால் அலங்கரிப்பதுபோலாகும். தமிழுடன் சேரும் அழகற்றவைகளும்கூட அழகுறும். இத்தொகுப்பில் எனது தமிழ்நடை இயற்தமிழ் இலக்கணம் மீறிப் பலஇடங்களில் சறுக்கியிருக்கின்றன.
வரலாற்றுக் காவியம் என்பதால் அன்றைய வழக்குத்தமிழில் மொழிக்கலப்பு இருந்திருக்கின்றன. ஆகவே புராண உயிரோட்ட இழைகள் அருந்துவிடாதபடி அப்படியே இருக்கச்செய்த முயற்சிதான் பல பெயர்கள், வாக்கியங்களில் பிரதிபலிக்கின்றன. தமிழாக்கம் பெயர்மாற்றம் என்றெல்லாம் கருதிச்செயல்பட துணிவுறாததினால் விளங்குசொற்களை வழக்கினின்று மாற்றாதிருக்கவும் நினைத்தேன். எனினும் சிலபோது அங்கொன்றுமிங்கொன்றுமாய்ச் சில மாற்றுச்சொற்களை அடைப்பினுள் இட்டுள்ளேன். சீர்மல்கும் செம்மொழி இதை ஏற்கும் என்று நம்பித்துணிந்தேன்.
வரலாறுகளைப் பொறுத்தமட்டில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவைகளை எடுத்தாளும் ஆய்வர்களின் காலக்கணிப்பு விரித்துரைக்கும் புலமைச்சிறப்பு, கண்டறிந்த முக்கிய நிகழ்வுகள் நிகழ்வுற்ற இடங்கள், சம்பந்தப்பட்ட பாத்திரர்கள் பற்றிய நோக்குகள் அடிப்படைநூல் ஆதாரங்கள், அக்காலத்தே வாழ்ந்;தவர் வழங்கிய செய்திக்குறிப்புகள் இன்றுவரை நிலைத்து நிற்கும் செவிவழிச்செய்திகள் மற்றும் புராண மையக்கருத்துகள் எனப் பல்நிலையில் தொகுத்தாண்ட அறிஞர்பெருமக்களின் ஆக்கத்தினின்று எடுத்தல்லாது வேறெவ்விதத்தும் புதிதாக ஒன்றினைக் கூறிவிடமுடியாது. முன்னோடிகளாய் விளங்குவோரின் நூல்களினின்றும் கிட்டிய வரலாறு தொடங்கி வாக்கியங்கள் வரை தொகுத்த பணிமட்டுமே என்னைச்சாரும். யாவற்றுப்பெருமைகளும் அம்முன்னவர்களுக்கே முந்திப்போய்ச்சேரட்டும்.
“தமிழுக்கு அமுதென்று பேர்” …… அத்தமிழ் வளர்ந்த மதுரைக்கு வேறுபெயரா இருக்க முடியும்! ‘மதுரைஅமுது’ என்ற இவ்வரலாற்றுத் தொகுப்பும் மதுரம் கொள்வது இயல்பாய்த்தான் இருத்தல் வேண்டும். மதுரைத் தலவரலாறு பண்டைய பாண்டியர் வரலாறு மதுரைக் கோவில் வரலாறு, என இவற்றிலெல்லாம் மூர்த்தி, தலம், தீர்த்தம் சேர்ந்த இறையருட் சுவையில் இரண்டறக்கலந்தது இம் “மதுரை அமுது” ஆகும். இந்;நூலினை கருதியோர், கண்ணுற்றோர், களிமனம் புகுந்து களிப்புற திருவாலவாயப்பன் அன்னை அங்கயற்கண்ணி அருள்புரியட்டும்.
பாரதம்: இந்தியத் துணைக்கண்டத்திற்குப் பெருமை சேர்க்கும் வட எல்லையில் அரணாக விளங்குவது இமயம் என்ற திருகைலாயமலை. பேரளவுப் பரிமாணமும் உலகின் மிக உயரமான சிகரகங்களை கொண்டதும் ஆகும். தெய்வீகச் சைவ எழில் மணம் பரப்பும் இவ்வரன்மலை என்னாட்டவருக்கும் இறைவனான சிவபெருமான் அன்னையுடன், அவர்தம் மக்களுடன், அடியார் திருகூட்டத்தினருடன், சிவகணங்களுடன் குடிகொண்டு கோலோச்சும் புண்ணியத்தலமாகும். பாரதத்தின் புகழில் பங்குபற்றும் பலப்பல தெய்வீக பெருமைகளைச் சேர்க்கும் புண்ணியத்தலங்களும் வளமை மற்றும் வழிபாட்டிற்குகந்ததுமான புண்ணிய நதிகள் சிலிர்த்துப் பாயும் நாடாகும். ஒருமைப்பாடு, மனிதநேயம், அடிப்படை இறைஉணர்வும், கட்டுக்கோப்பும் கொண்ட ஞானபூமியாகும். மக்களை இணைத்துப் பக்குவப்படுத்தும் பல மதங்கள், பல மொழிகள், கலாச்சாரம் பண்பாடு என, வேறுபட்டதாய் விரிந்துகாணப்படினும் இந்திய மக்கள் என்ற ஒன்றிய உணர்வினைப் பதித்து பலன் நுகர் ஜனநாயகப் பூமி நம் பாரதம்.
தென்தமிழ்நாடு: இத்தென்னாட்டின் பழமைச் சிறப்பு, பாரதத்திற்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாகும். தமிழ்நாடு என்னும் திருநாட்டின் புகழ் அளவிடற்கரியதாகும். உலகமொழியில் ஒப்பற்ற மொழியெனத் தமிழ் மொழி தாங்கி, தவமும் சீலமும் தாங்கிய ஞானியர்களும் வாழ்ந்த நாடாகும்.
“பண்பும் படைவலியும்
பயிலும் கலைச்சிறப்பும்
அன்பும் அறமும் வளர்
அருந்தமிழ்மாநாடு
தண்புனல் ஓடைகளும்
தழைத்திடும் பூம்பொழிலும்
விண்படு மால்வரையும்
விளங்கும் எழில் காணும்;
நிலமும் நிலவும் தோன்றுதற்கு முன்னரே தோன்றிய தொல்தமிழ் என்றும் எம்மொழயிலும் எம் தமிழே சிறந்தது, எனப் பன்மொழி பயின்றோரும் கூறுதற்கு இணங்க, இச்செம்மொழிக்குச் சங்கம் வளர்த்து அதனில் அங்கம் வகித்த இறையனாரும் முருகவேளும் இதன் புகழ் உயர்த்தினர் எனின், என்னே இதன் உயர்வு!
வீரம், விவேகம,பொறை, புலமை, கலைகள், இறையாண்மை கொண்ட திருத்தமிழ்நாடு வாழ்க வாழ்கவே. முந்தைய தமிழ்ச்சமுதாய மக்களின் பழந்தென்மதுரை இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே தோரயமாக 30,000 ஆண்டுகளுக்கு முந்திப் பரவியிருந்ததென்பது மொழியறிஞர் பாவாணரின் கூற்றாகும். இறையானார் களவியலுரை தரும் ஆதாரப்படி, சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன் பாண்டியர் ஆட்சி, குமரியைத் தலைநகராகக் கொண்டு அதற்குத் தெற்கே உள்ள நீண்ட நிலப்பரப்பை ஆண்டதாகக் கூறப்படுகிறது. இன்றைய குமரிமுனை தொட்டு ஈழம் உட்பட, அதன்தொடர் தெற்காக, ஆஸ்த்ரேலியாக்கண்டம் வரை நிலப்பரப்பு இருந்ததென ஆய்வுகள் கூறுகின்றன.
இப்பரப்பிற்குட்பட்ட தென் எல்லை ஒலிநாடு என்றும்; இதன் கிழக்கு எல்லையை ஒட்டி ஆஸ்த்ரேலியாவாகவும,; மேற்குக்கீழ்ஒரம் மடகாஸ்கர் தீவும், கடலும் மேற்கின் மேல்புறம் பொதிகை மலைத்தொடர் என்றும், வரைபடத்தில் காணப்படுகின்றது. (வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது) ஒலிநாட்டின் நடு நேர்கோட்டின் கீழிலிருந்து மேலாக, கன்னி ஆறு, பக்ருளி ஆறு என இரு ஆறுகள் தோன்றி வங்கக் கடலில் கலந்திருக்கின்றன. இவ்விரு நதிகளுக்குமிடையே மேருமலை அணியாகவும், அதற்கடுத்து மூதூர் என்ற நாடும், அதற்கும் மேல்புறம் பெரு ஆறும், அடுத்துக் குமரி ஆறும், உயிரோட்டமுள்ள நதிகளாகத் தவழ்ந்து நாட்டை வளமாக்கிக் கடலில் கலந்துள்ளன. இக்குமரிஆற்றின் தோற்றுவாய் முதல் கடற்சங்கமமாகும் பகுதிவரை படர்ந்திருந்ததே அன்றைய தென்தமிழ் நாடாகும். இதுவே ஆதிமதுரையுமாகும்.
ஆதிமதுரை
இங்குதான் அகத்தியரைத் தலைமையாகக்கொண்ட முதற்தமிழ்ச்சங்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது பிற்காலத்தில் கடல்கோளால் இந்நாடு அழிந்துபட்டிருக்கிறது. இதன்பின் வெண்டேசர் செழியன் என்ற பாண்டிய மன்னர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கிறார். இவர் காலத்தில் இடைச்சங்கம் என்றழைக்கப்படும் இரண்டாம் தமிழ்ச்;சங்கம் உருவாகியிருக்கிறது.
இச்சங்கத்திற்கு தொல்காப்பியர் தலைமையேற்றிருந்தார். இந்நகரமும் இரண்டாம் முறையாய்க் கடல் கொண்டது. அன்றைய காலத்தில் இமயமலையின் ஒருபகுதி கடலால் சூழப்பட்டிருந்ததென்பது வரலாறு. இன்றைய ஆராய்ச்சியாளர்கள் அதை மெய்பிக்கும்வகையில், இமயத்தின் பலஇடங்களில் கடல்வாழ்உயிரினங்களின் எலும்புக்கூடுகள், படிமங்கள் பலவற்றைக்கண்டு ஆய்ந்து கூறியுள்ளனா
ஏறத்தாழ 4500ஆண்டுகளாக, 89 பாண்டிய அரசர்கள் தொல்தமிழ்நாட்டை ஆண்டிருக்கிறார்கள். தொல்காப்பியமும் புறநானூறும் 6500 வருடங்கள் முந்தைய வரலாறுகளைக் கூறுவதோடு மகாபாரத அர்ஜூனன் மதுரைக்கு வந்து பாண்டிய இளவரசி அல்லிராணியை மணந்தாகவும் கூறுகிறது. மேலும் மதுரை பாண்டியப் பேரரசின் பழைமை பற்றியும் மதுரைக் கோவில் பற்றியும் கூறும் ஆதாரங்களில் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய கீரேக்கம், சீனம், எகிப்து நாடுகளின் பண்டைய இலக்கியங்களிலும், சிங்கள வரலாற்று நூல்களான இராஐhளி, மகாவம்சம் போன்ற நூல்களிலும,; 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பௌத்த, சமண, சாணக்கியர் சந்திரகுப்த மன்னர்களின் சாஸனங்களும் கூறுவதோடு, வேள்விக்குடி சின்னமனூர் திருவாலங்காடு முதலிய ஊர்களில் கிடைக்கப்பெற்ற செப்புப்-பட்டையங்களிலும், கற்காலக்கருவிகள், ஆதிதச்சநல்லூர், மதுரைக் கோவலன் பொட்டலிலிருந்தும,; கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழி, அரிக்கமேடு ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்திய அநேக குறிப்புகளிலும், ஆனைமலை ஐயர்மலை கல்வெட்டுகளிலும் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவிலைச் சுற்றியுள்ள 44 கல்வெட்டுகளிலும் ஆலயத்தின் பழமை மற்றும் பாண்டியப் பேரரசின் தொன்மையையும் விளக்;குவதாக உள்ளது.
கி.பி.7ம் நூற்றாண்டில் மதுரைக்கு திருஞானசம்பந்த மூர்த்திசுவாமிகள் வந்ததும், கூண்பாண்டியன் வேப்புநோயைத் தீர்த்த வரலாறும,; கி.பி.800ல் வெளிநாட்டைச் சேர்ந்த புகழ்மிக்க யாத்திரிகர்கள், பெரிபுளுஸ், தாலமி மற்றும் கி.பி.13-ம் நூற்றாண்டில், தமிழகத்திற்கு வந்த மார்க்கபோலோவும் இதனை குறிப்பிட்டுள்ளார்கள். பாண்டியர் என்ற சொல் பண்டை என்ற பழமைக்கு ஒற்றைச்சொல் விளக்கமாகும். “சோழநாடு சோறுடைத்து”எனப்போல் “பாண்டிய நாடு பழைமையுடைத்து” என ஒரு அணியை அணிவிக்கலாமே!
வரலாற்று அடிச்சுவடுகளில் ஆயிரமாயிரம் உண்டு. அஃதில் இங்கு நாம் காணும் இம்மதுரை அமுதில் கலந்த பாண்டிய, சோழ, பல்லவ, விஜயநகர சாளுவ, நாயக்கர் அரசுகளும் மற்றும் இதர பல ஆட்சியாளர்களின் செய்திகளோடு, மதுரை திருவாலவாயன் திருக்கோவில் வரலாறுகளாய் விரிந்து நிற்கிறது இத்தொடர். மதுரை அமுதின் திருக்காவிய நாயகி நாயகர் ஸ்ரீ மீனாக்ஷி சோம சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பற்றிய அனைத்து விவரங்களையும் முழுவதுமே சேர்த்துப்பார்த்தால் கூட அது ஒரு முகவுரையாய் மட்டுமே இருக்கும்.
ஆகம சிற்ப அரும்கோயில் கலைகள் யாவும் கலைநுட்ப வல்லுநர்கள் என்றென்றும் கற்றுணரத்தக்க வகையில் அமைத்த கலைக்கூடமாகவும், அருளாளர்களின் அன்பு நெஞ்சகத்தினின்றும் வற்றாது பொழிந்த வண்ணமே இருக்கும் அவ்விறைத்திருவருளின் வான் கங்கையாகவும், பார்த்த மாத்திரத்திலயே பக்தர்களை பரவசப்படுத்தும் பக்திப் பாற்கடற் கூடமாகவும், காலச்சுவடுகளில் பதிவுகளில் காணும் பெருமைகளை கற்பனைக்கெட்டா கணிதமும் கூறா பேரதிசியத் தொகுப்புகளை எவ்வாறு யாரால் முழுவதும் கூறிவிட முடியும். ஆகவே இம்மதுரை அமுது தொகுப்பு முழுவதும் ஒரு முகவுரையே அன்றி வேறு எவ்விதம் இருக்க முடியும். அவ்வமுதினை சுவைப்போம். அக மகிழ்வோம்.
இதற்கு பல்நிலைகளில் துணைபுரிந்த முன்நூல் ஆசிரியர்கட்கும், இம்முயற்சிக்கு தூண்டுதலும், துவளவிடாது துணைநின்ற என் துணைவி திருமதி பாரிஜாதம் அவர்கட்கும், என்னருகிலேயே இருந்து காலம் கருதாது என் கருத்துக்களுக்கு உருவம் தந்து அக்கருத்துக்களை ஏற்று மாற்றமின்றி கவனத்துடன் கணிணியில் ஏற்றி பல விஷயங்களை சொல்லியதினின்றும் பிரித்து தலைப்பினுட்புகுத்தி சலியாது பணி செய்து கிடப்பதே என் பணி என இறுதி வரை செயலாற்றிய எனது மாணவர் திரு. சிவ. உதயகுமார் மற்றும் பெரியவர் வெங்கட்ரத்தினம் அவர்கள் மற்றும் எனது முதன்மை மாணவர். மு.கமலக்கண்ணன் மற்றும் திரு. வெங்கட்ராமன் மேலும் அட்டைப்படம், வண்ணப்படங்கள் மற்றும் பல் ஓவியச் சித்திரங்கள் என நூலுக்குப் பொருத்தமான பலப்பலப் பணிகளை உடனிருந்து செய்தளித்த திரு. சிவகாசி கணேஷ்குமார், திருமதி. ராஜேஸ்வரி சரவணன் இன்னும் எனது ஆன்மீக அன்பு நெஞ்சங்களுக்;கும், ஸ்ரீ மீனாக்ஷி திருக்கோவில் ஆதிசைவபட்டர் சிவத்திரு. சண்முக பட்டர், சந்திரசேகர அசோக் பட்டருக்கும், இதுபோல் பெரும் உதவிகள் புரிந்து பெயர் கூறவேண்டாம் எனச் சொன்னவர்கட்கும், அன்னை ஸ்ரீ மீனாக்ஷி திருவருள் யாவற்று பிறப்பிலும், கூடி நிற்பதாகுக. உடலுக்கு உயிர் போல இன்னூலுக்கு உயிராய் நின்ற முன் ஆசிரியர் பெருமக்கள் பலருக்கும் என்றென்றும் நன்றி நவில கடன்பட்டுள்ளேன். இவர்களது பெயர் மற்றும் விவரங்களை நூலாதாரங்கள் என்ற தொகுப்பில் விரிவாய் சமர்ப்பித்துள்ளேன்.
அடியவர்க்கடியவன்
பழங்காநத்தம் டி.எஸ்.கிருஷ்ணன்.
ஸ்வார்த்தம் சத்சங்கம்
email: swarthamsathsangam@gmail.com