பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
03:07
மஹேஸ்வரனுக்கு (சிவனுக்கு) கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தை அளிக்க மறுத்த தட்சனைக் கண்டித்து புத்திபுகட்ட அன்னைபராசக்தி எவ்வளவோ முயற்சித்தும், தந்தை தட்சன் கேட்காததால், யாகம் நிறைவு பெறாது போகக் கடவது என அன்னை சாபமிட்டதோடு அந்த யாக குண்டத்திலேயே வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். ஈசன் உடனே கோபாவேசம் கொண்டு, தாட்சாயணியின் உடலைத்தன் தோள்மீது வைத்து ருத்ர தாண்டவம் ஆடினார். அன்னையின் உடல் அச்சுழற்சியில் 64 துண்டுகளாகச் சிதறி பூமியில் வீழ்ந்தது எனவும், அதில் இதயபாகம், திருக்கோவில் அருகே கிருதுமால் நதி தீரத்தில் இடம் பெற்றதெனவும் பத்மபுராணம் கூறகிறது.
இச்செய்தியறிந்த மதங்க முனிவர் கௌதமர் இதன் காரணகாரிய தத்துவம் உணர்ந்து உடனே பிருங்கிமுனிவர், மௌஞ்சாயனர், கௌசிகர், பரத்துவாஜர் ஆகியோருடன் நதிக்கரைவந்து அன்னையைப் பிரார்த்தித்து, தாமரை இலையில் செம்பஞ்சுக்குழம்பால் பாரிஜாத மொட்டினால் தொட்டு ஸ்ரீ சியாமளச்சக்கரத்தை எழுதினார். பின் நியமப்படி சக்கரத்தை பிரதிஷ்டை செய்ததோடு ஈஸ்வரனை வேண்டி தியானித்து அன்னையின் உருவப்பிரதிஷ்டைக்காக வேண்ட அவர்முன் இறைவன் ஒரு மரகதக்கல்லை தோற்றவித்தார். அப்போது இறைவி மனமகிழ்ந்து தன் உருவத்தை அவர் மனதில் தோன்றச் செய்தாள். அவ்வழகிய உருவை எண்ணி மதங்கமுனிவர் கையால் அக்கல்லில் அழுத்த அங்கே அருட்கடலாய், சியாமள பீட சக்ரவர்த்தினியாய், அன்னை ஸ்ரீ மீனாக்ஷி தேவியின் திரு உருவம் கிடைக்கப்பெற்று, அத்திரு உருவை தன்கையில் இருந்த மலரில் சுகப்பிரம்மரிஷி பிரதிஷ்டை செய்தார். இவ்வாறு இறையருளும் குருவருளும் ஒரு சேர அன்னை அங்கு தோன்றினாள். கௌதம முனியின் மானச கற்பத்தில் தோன்றியதால் அன்னை மாதங்கி என்ற பெயரும், ஐந்துரிஷிகள் சேர்ந்து உருவாக்கியதால் ""ஸ்ரீ பஞ்ச ராஜமாதங்கி என்ற இருநாமங்களும் அன்னைக்குரியதாயிற்று.
இவ்விதம் அன்னை இறைவனைக் குறித்து ஆங்கே ராஜ நிஷ்டையில் இருந்து ராஜ மாதங்கியாய்த் தவம் இயற்ற சுயம்புலிங்கம் உருவானதாயும், இறைவன் அழகில் சொக்கி நின்ற அம்பாளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனுக்குச் சொக்கநாதர் எனப் பெயர் வந்ததாயும் புராணம் சொல்வதோடு, அன்னையை இறைவன் தன் மனத்தில் அழகொழுக சுந்தரமாய் எண்ணி சுந்தரியை பூஜை செய்த காரணத்தால் அண்ணலை சுந்தரேஸ்வரர் எனத் திருநாமம் பெற்றதாயும் கூறுவர். இதையே குமரகுருபரர், இவ்வாறு கூறுகிறார். ""ஒருவன் திருவுள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியமே எனக் கூறுவது என்னே திருக்காட்சிக்குப் பொருத்தமாயிற்று. குமரகுருபரரின் உள்ளத்தேயும் அல்லவா அன்னையின் அருட்காட்சி பதிவாயிருக்கிறது.