பதிவு செய்த நாள்
16
ஜூலை
2018
03:07
கிரோதாயுகத்தில் தேவர்களின் தலைவன் இந்திரன் தன் சபையிலிருந்து ஒரு நாள் தேவ மகளிரின் நடனத்திலும் இசையிலும் மகிழ்ந்து அக்கேளிக்கைகளில் தன்னை மறந்திருந்தபோது தேவகுரு வியாழ பகவான் அங்கு வந்தார். இந்திரன் மதிமயங்கிய நிலையில் அவரை வரவேற்று மரியாதை செய்யாதும் மதியாமலும் இருந்துவிட்டான். இதுகண்ட குரு மிகக் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறினார். அக்கணம் முதல் இந்திரன் தன் பொலிவையும் புகழையும் இழந்து வாடித்தவித்தான். குருவை அவமரியாதை செய்ததால் ஏற்பட்ட சாபநிலைதான் இது என அறிந்து குருவை உடனே கண்டு மன்னிப்புக் கோர விழைந்தான். எங்கு தேடியும் குருவைக் காண முடியவில்லை. தலைவன் இன்றி இந்திரலோகமும் களை இழந்தது. பிரம்மனின் ஆலோசனைப்படி செயல்படப் போய், விஸ்வரூபன் விருத்ராசுரன் ஆகியோர்களைக் கொன்ற பாவமும், பிரம்மஹத்தி தோஷமெனப் பிடித்துத் துன்புறுத்த, இறுதியில் குருபகவான் அவனை மன்னித்து அவனுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பூவுலகு அழைத்து வந்தார். பல புண்ணிய நதிகளில் நீராட வைத்தார். பின் கடம்பவனத்தருகே வந்த போதே அவனது தோஷங்கள் நீங்கியதை உணர்ந்தான்.
குருவின் துணையுடன் ஆங்கே கடம்பவன நிழலில் தூய தீர்த்தக் கரையில் அழகிய பொலிவுடன் இருந்த சிவலிங்கத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்து வணங்கினான். இறைவனால் உண்டாக்கப்பட்ட தாமரைக் குளத்தில் மூழ்கி எழுந்து முறைப்படி நீர்ப்பூ, நிலப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூக்களால் அர்ச்சிக்க, இறைவன் எழுந்தருளி குருநிந்தனைப் பாவத்தையும் சகல தோஷங்களையும் நீக்கியருளியதோடு சித்திரை மாதம் பௌர்ணமி தோறும் தன்னை வணங்கினால் வருடந்தோறும் வந்து வணங்கிய பேறும் முத்தியும் கிட்டும் எனக் கூறி லிங்கத்துட் புகுந்து மறைந்தார்.
அவ்வமயம் வானின்றும் கீழிறங்கியது ஒரு அழகிய விமானம். அதில் எட்டு யானைகளும், முப்பத்திரண்டு சிங்கங்களும், அறுபத்து நான்கு சிவகணங்களும் தாங்கி நின்ற அவ்விமானத்தை சொக்கலிங்கப் பெருமானுக்கு அர்ப்பணித்து அழகு சேர்த்த இந்திரன் தன் குருவை மீண்டும் வணங்கி அவருடன் தேவருலகு சென்று மேன்மை பெற்றான்.
இம்மண்ணுலகில் யாவற்று லிங்கங்களுக்கும் முன் தோன்றி இம்மூலலிங்கம் மாமதுரைக் கடம்பவனத்தே தோன்றி சோமசுந்தரச் சொக்கநாதர், அன்னை மீனாட்சியும் அவ்வாறே அங்கு எழுந்தருளி அருள்பாலித்த இத்திருத்தலத்தே நாம் வாழுவது நாமெல்லாம் எத்துணை புண்ணியங்கள் செய்ததாலோ எனப் பெருமை கொள்வோம்.