வல்லக்கோட்டை: வல்லக்கோட்டை முருகன் கோவில் கோபுரத்தின் உச்சியில், அரச மரம் வளர்க்கப்படுவதை, பக்தர்கள் பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கோவிலைச் சுற்றி ஏராளமான இடம் இருக்கும் நிலையில், அறநிலையத்துறையின், அற்புதமானச் செயலை பலரும் வியந்து, பாராட்டுகின்றனர்!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில், வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி அருள் பாலிக்கிறார். 1,200 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இங்கு, 7 அடி உயரத்தில், முருகப்பெருமான் பக்தர்களுக்குக் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங் களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், இங்கு வந்து முருகனை வழிபடுகின்றனர். இந்தக் கோவிலில் பக்தர்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது நீண்ட கால ஏக்கமாக உள்ளது. குறிப்பாக, வாகன நிறுத்தம் வசதியின்மை, மோசமான சாலைகள், சுவாமி தரிசனத்திற்கு கூடுதல் வசதியின்மை என, பல கோரிக்கைகள் நீண்ட காலமாக நிறைவேற்றப் படாமல் உள்ளன. கோவிலின் மேம்பாட்டிற்கு, எந்தவித நடவடிக்கையும் அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்படாத நிலையில், வெளியே தெரியும் பிரமாண்ட கோபுரத்தில், பல அடி உயரத்திற்கு பசுமையாக வளர்ந்திருக்கும் அரச மரமும், அதிகாரிகள் கண்களுக்குப் புலப்படாமல் போயுள்ளது. கோபுரம் மீது அரச மரம் வளர்வதால், கோபுரத்தின உறுதித் தன்மை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே, கோபுரத்தின் மீது உள்ள அரச மரத்தை முற்றிலும் அகற்றி, கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.