பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
02:07
திருப்பூர்:ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, திருப்பூரில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு, கூழ் படைத்து, பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி மாதம் பிறந்ததும், தட்சணாயனம் துவங்குகிறது. மக்களின் வாழ்வாதாரமாக இருந்த ஆறு, குளங்களுக்கு, புதிய வெள்ளம் வரும் ஆடி மாதத்தை, தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த மாதத்தில், பார்வதியின் சக்தி பல மடங்கு அதிகரிப்பதாக ஐதீகம். அதனால், அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளியில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான நேற்று, திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பூர் தாராபுரம் ரோடு, கோட்டை மாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.
பெண்கள், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ ஆகியவற்றை, பக்தர்களுக்கு வழங்கினர். கோவில் வளாகத்தில், அன்னதானமும், கேழ்வரகு மற்றும் ராய்க்கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவில், ஆண்டிபாளையம் மாரியம்மன் கோவில், மங்கலம் பல்லடத்தம்மன் கோவில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோவில்களில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சிறப்பு வழிபாடு நடத்தி, கேழ்வரகு கூழ் வழங்கினர்.பூம்புகார் நகர் முத்து மாரியம்மன் கோவில், காந்திநகர் மாகாளியம்மன் கோவில்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.