பதிவு செய்த நாள்
27
ஜன
2012
11:01
ஈரோடு: ஈரோட்டில் நடக்கும் பொருட்காட்சியில், தண்ணீரில் மிதக்கும் ராமர் கல், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், மிதக்கும் கல்லை பார்க்க மக்கள் கூட்டம் அதிகம் கூடுகிறது.ஈரோடு வ.உ.சி., பார்க்கில், தமிழக அரசின் சாதனை விளக்க பொருட்காட்சி நடந்து வருகிறது. பல்வேறு அரசுத்துறைகள் சார்பில், ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை சித்தா பிரிவு சார்பில், மூலிகை செடிகள் மற்றும் மருந்துகள் பற்றிய அரங்கில், "ராமர் கல் என்ற கல் பொதுமக்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது. தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில், இந்த கல் மிதக்கிறது. வெளித்தோற்றத்தில் பாறை போன்று காணப்படும் இந்த கல், தண்ணீரில் போட்டதும் மிதப்பதால் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்."ராமர் கல் பற்றி, சித்த மருத்துவர் முத்துகிருஷ்ணன் கூறியதாவது:கடல் பகுதியில் இயற்கையாக காணப்படும் கற்களில், இதுவும் ஒன்றாகும். நடுக்கடலில் மிகப்பெரிய பாறை திட்டுகளாக காணப்படும். இவை தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டவை. பாறையில் சிறு சிறு துவாரங்கள் உள்ளன. இவை வெற்றிடமாக உள்ளதால், தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டுள்ளது. ராமாயண காலத்தில் இலங்கைக்கு செல்ல, இதுபோன்ற பாறைகளை கொண்டுதான், ராமர் பாலம் அமைத்தார். அதனால், இவை, "ராமர் கல் என அழைக்கப்படுகின்றன.கடல் பயணங்களின் போது, படகுகள், கப்பல்கள் கவிழ்ந்தால், இதுபோன்ற பாறைகளின் மீது ஏறி உயிர்காத்து கொள்வர். மன்னார் வளைகுடா பகுதியில் இவ்வகை பாறைகள் அதிகம், என்றார்.