கோவில்களில் தீபம் ஏற்ற தடை: சிவனடியார்கள் உண்ணாவிரதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2018 11:07
தஞ்சாவூர்: கோவில்களில் பக்தர்கள் விளக்கேற்றுவதற்கு அறநிலையத்துறை தடை விதித்துள்ளதை கைவிட வலியுறுத்தி கும்பகோணத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட அமைப்பினர் நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்துக்கு திருவடிக்குடில் சுவாமிகள் தலைமை வகித்தார். இதில் 20க்கும் மேற்பட்ட சிவனடியார்களும், பக்தர்களும் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் பேசியது: கோவில்களில் திருவிளக்கு, தீபம் ஏற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல. இறைவன் ஜோதி ரூபமானவன். பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறுவதற்காக விருப்பமான கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை ஏதோ காரணம் சொல்லி அறநிலைய துறை தடுத்து நிறுத்துவது சரியான நடவடிக்கையாக இல்லை. தமிழக அரசு மற்றும் அறநிலைய துறை மீது மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே அரசின் இத்தகைய விளக்கேற்றும் தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும். 63 நாயன்மார்களில் ஒருவரின் கலிய நாயனார் மிகுந்த சிவபக்தி உடையவர். தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்த நிலையில் எண்ணை வாங்க பணம் இல்லாததால் தனது கழுத்தை தானே அறுத்து ரத்தத்தில் விளக்கேற்ற முயன்றபோது சிவபெருமானே நேரில் தோன்றி தடுத்தார். எனவே இதில் பக்தனின் கொள்கை, உறுதி என்பது முக்கியமானது. அதனடிப்படையில் கலியநாயனாரின் குருபூஜை நாளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரதம் இருக்கிறோம் இவ்வாறு கூறினார்.