வடமதுரை: சந்திர கிரகணத்தை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இன்று (ஜூலை 27) மாலை 6:00 மணிக்கே நடை அடைக்கப்படுகிறது. வடமதுரையில் கடந்த ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்கி 13 நாள் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு 9:00 மணியளவில் சவுந்தரவள்ளி தாயார் சன்னதியில் திருக்கல்யாணம் நடந்தது. ஒன்பதாம் நாள் நிகழ்வான தேரோட்டம் வழக்கமாக மாலை நேரத்தில் நடக்கும். இந்தாண்டு ஆடி மாத பவுர்ணமி நாளில் சந்திரகிரகணம் ஏற்பட்டுள்ளதால் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இன்று காலை 9:00 மணிக்கே தேரோட்டம் நடக்கிறது. பின்னர் மாலை 5:00 மணியளவில் சுவாமி தேர்க்கால் பார்க்கும் நிகழ்ச்சி முடிந்ததும், மாலை 6:00 மணிக்கே கோயில் நடையடைக்கப்படுகிறது. பின்னர் நாளை (ஜூலை 28) காலை 6:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம் உள்ளிட்ட பாரம்பரிய வழிபாடுகள் செய்த பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.