பதிவு செய்த நாள்
27
ஜூலை
2018
02:07
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, அடுத்த மாதம், 3ம் தேதி துவக்கி, 7ம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி சுப்ரமணி சுவாமி கோவிலில், ஆடி மாதம் வரும் கிருத்திகையை ஆடிக்கிருத்திகை விழா வெகு விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆடிக்கிருத்திகை நாளில் இருந்து, தொடர்ந்து மூன்று நாட்கள், மலையடி வாரத்தில் உள்ள சரவணப் பொய்கையில் தெப்பத் திருவிழா நடக்கும்.அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை விழா, அடுத்த மாதம், 3ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, 4ம் தேதி ஆடிப்பரணி, 5ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.வரும், 6ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 7ம் தேதி மூன்றாம் நாள் தெப்பமும் நடைபெறும். தெப்பத்தில் மூன்று நாட்களும், முருகன் கோவிலின் பணியாளர்களின் நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடக்கிறது. மேலும், பிரபல பாடகர்கள் மூன்று நாட்களும் பக்தி பாடல்கள் பாடுவர். ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து மூலவரை வழிபட்டு செல்வர். பக்தர்கள் வருகையையொட்டி, நகராட்சி நிர்வாகம், 21 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள, 16 உயர் கோபுர மின் விளக்குகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், நகராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளையும் துரிதப்படுத்தி உள்ளது.