பதிவு செய்த நாள்
03
ஆக
2018
11:08
கோவை: கோவை, பொள்ளாச்சி கோயில்களில் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவை, புலியகுளம் மாரியம்மன் கோவிலில் ஆடி பெருக்கையொட்டி தட்சின காளி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். பொள்ளாச்சியில் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. ஆற்றங்கரையோரங்களில் மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், காலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது. பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டிலுள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், காலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகாதீபாராதனையும், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டது.
இதுபோல், பொள்ளாச்சியிலுள்ள பெருமாள் கோவில், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களின் வருகையையொட்டி கோவில்களில் நான்கு கால அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆழியாறு ஆற்றின் கரையோரத்தில் மக்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பெண்கள் மஞ்சள் சரடு வைத்து வழிபாடு நடத்தி, அவற்றை கழுத்தில் அணிந்து கொண்டனர்.மேலும், உள்ளூர்பகுதி மக்கள் மாட்டுவண்டியில் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். குடும்ப சகிதமாக மக்கள் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி, ஆற்றங்கரையோரங்களில் சாப்பிட்டு பண்டிகையை கொண்டாடினர்.