பதிவு செய்த நாள்
03
ஆக
2018
11:08
காஞ்சிபுரம்: குமரகோட்டத்தில், அகல் விளக்கு ஏற்ற தடை விதித்துள்ளதால், அணையா விளக்கில் ஊற்ற, நான்கு ரூபாய்க்கு நெய் விற்பனை துவங்கியுள்ளது. கோவில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக ஏற்றப்படும் விளக்குகளால், அவ்வப்போது சில விபத்துகள் ஏற்படுகின்றன.கோவில்களில் தீ விபத்துகளை தடுக்க, அனைத்து கோவில்களிலும், அணையா விளக்கு வைக்க, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள கோவில்களில், அணையா விளக்கு அமைக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலில், அகல் விளக்கு ஏற்ற, கோவிலின் வடமேற்கு திசையில் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இங்கு விளக்கேற்ற, ஒரு நெய் அகல் விளக்கு, இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்தனர். சமீபத்தில், கோவிலில் தீ விபத்து காரணமாக, பெண் ஒருவர் பாதிக்கப்பட்டதால், அகல் விளக்கு மற்றும் கற்பூரம் ஏற்ற, கோவில் நிர்வாகம் தடை விதித்தனர்.
இதைத்தொடர்ந்து, அணையா விளக்கு அமைக்கப்பட்டதால், பக்தர்கள் பலரும், தாங்கள் கொண்டு வரும் நெய், எண்ணெய் போன்றவைகளை அணையா விளக்கில் ஊற்றி வழிபடுகின்றனர். கோவிலில், விளக்கு விற்பனை நிறுத்தப்பட்டதால், அதற்கு பதில், ஒரு சிறிய பாட்டிலில், நான்கு ரூபாய்க்கு நெய் விற்பனை துவங்கியுள்ளது. வீட்டிலிருந்து நெய் கொண்டு வராதவர்கள், கோவிலில் விற்கும், பாட்டில் நெய் வாங்கி, வழிபட துவங்கியுள்ளனர்.