பதிவு செய்த நாள்
06
ஆக
2018
02:08
சோமங்கலம்: பெரியபாளையத்தம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி, தீ மிதித்தனர். ஸ்ரீபெரும்புதுார் தாலுக்கா சோமங்கலம் கிராமத்தில், பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அண்மையில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கோவிலின் ஆடி மாத திருவிழா, 10 நாட்களுக்கு முன் துவங்கியது. விழாவின், 10வது நாளான நேற்று தீமிதி திருவிழா நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி, விரதம் இருந்து, தீ மிதித்தனர். இதில், சோமங்கலம், மணிமங்கலம், அமரம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்துார் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள பல கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.