பதிவு செய்த நாள்
07
ஆக
2018
12:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் தெப்பக்குளம், பூங்காவாக மாறிவிட்டதா, என பக்தர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். பெருமாளின், 108 திவ்ய தேசங்களில், 45வதாக, காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவில் விளங்குகிறது.
கால்வாய் ஆக்கிரமிப்பு: இங்கு மட்டும் தான், பெருமாள், எட்டு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவில் அருகே உள்ள, கஜேந்திர புஷ்கரணி தீர்த்தம் என்ற தெப்பக்குளம் உள்ளது. இக்குளத்திற்கு வரும் மழை நீர் கால்வாய், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், துார்ந்தும் உள்ளது. வர்தா புயலின்போது, குளத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது, 12 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் சீரமைக்கப்பட்டது. ஆனால், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய் சீரமைக்கவில்லை. இதனால், இக்குளத்தில் மழைநீர் தேங்குவது அரிதாக உள்ளது. தற்போது புற்கள் வளர்ந்து, பூங்கா போல காட்சியளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஓய்வு எடுத்து செல்வதற்காக கோவில் தெப்ப குளத்தை, பூங்காவாக மாற்றிவிட்டனரோ என்று எண்ண தோன்றுகிறது.
கோரிக்கை: எனவே, தெப்பக்குளத்திற்கு வரும் மழைநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை துார்வார வேண்டும். அல்லது, குளத்திற்குள் அழகு செடிகள், செயற்றை நீர் ஊற்றுகள், வண்ண மின்விளக்குகள், இருக்கை வசதிகள் அமைத்து, குளத்தை முற்றிலும் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.