பதிவு செய்த நாள்
07
ஆக
2018
12:08
திருச்செங்கோடு: கைலாஷ் மானசரோவருக்கு, புனித யாத்திரை சென்ற தமிழர்கள், மோசமான வானிலையால், தாயகம் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாமக்கல், கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் பகுதிகளில் இருந்து, கடந்த சில வாரங்களுக்கு முன், 23 பேர், சீனா- நேபாள எல்லையில் உள்ள, கைலாஷ் மானசரோவருக்கு புனிதயாத்திரை சென்றனர். தற்போது, மோசமான வானிலையால், விமான சேவை பாதிக்கப்பட்டு, அனைவரும் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
புனித யாத்திரை சென்றவர்களில் ஒருவரான, திருச்செங்கோடு வித்யாவிகாஸ் கல்வி நிறுவனங்களின் மேலாண் இயக்குனர், குணசேகரன், 62, தொலைபேசியில் கூறியதாவது: சிமிகோட் பகுதியில், டிராவல் ஏஜன்ட் உறவினர் வீட்டில், பத்திரமாக தங்கியுள்ளோம். 14பேர் செல்லக்கூடிய சிறு விமான இயக்கமும் நிறுத்தபட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மூலம், ராணுவ ஹெலிகாப்டர் வந்து எங்களை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இறக்கி விட்டால், டில்லி விமானம் பிடித்து வர வாய்ப்புள்ளது. இல்லையெனில், வானிலை சரியான பின் தான் வரமுடியும். வடமாநிலத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் உணவின்றி, தங்க இடமின்றி அவதிப்படுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.