மன்னர் வல்லபதேவ பாண்டியன் ஆட்சி புரிந்த காலத்தில், காசி யாத்திரை சென்ற முதிய அந்தணர் ஒருவர் மதுரை நகருக்கு வந்தார். குளிர்காற்று வீசியதால் அந்தணர் நடுங்கினார். நகர்வலம் வந்த பாண்டியன் அது கண்டு இரங்கி தன் மேலாடையை வழங்கினான். அந்தணர் “நீர் செய்த தர்மத்தால் உன் வம்சமே நன்மை பெறும். மறுமைக்காக சேர்த்து வைக்கும் புண்ணியம் இதுவே. இது போல் புண்ணியம் பல செய்து முழுமுதல் கடவுளைச் சரணடைந்தால் உனக்கு முக்தி உண்டாகும்” என்றார். அன்றிரவு மன்னனால் தூங்க முடியவில்லை. அந்தணர் குறிப்பிட்ட முழுமுதல் கடவுள் யார் என்பதை அறியும் ஆர்வம் எழுந்தது. நாடறிய சபையில் நிரூபிக்கும் பண்டிதருக்கு பொற்கிழி அளிப்பதாக அறிவித்தான். அந்த போட்டியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெரியாழ்வார் ’திருமாலே முழுமுதற்கடவுள்’ என நிறுவி பரிசு பெற்றார். சிறிய தர்மத்தால் கிடைத்த பெரிய லாபமாக திருமாலை வழிபட்ட பாண்டிய மன்னர் மகிழ்ந்தார்.