பதிவு செய்த நாள்
12
ஆக
2018
12:08
உடுமலை;திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மழையிலும் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இக்கோவிலில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, ஆடிப்பெருக்கு, சிவராத்திரி ஆகிய தினங்கள் விசேஷமானதாகும். நேற்றுமுன்தினம் முதலே, கடந்த ஆண்டை விட, இந்தாண்டு நுாற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் விவசாயிகளும்,இரவு முழுதும் பக்தர்களும் கோவிலுக்கு வந்தனர். நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னோர்களுக்கு, பாலாற்றின் கரையில் ஏராளமானவர்கள் திதி கொடுத்து வழிபட்டனர்.
இதற்காக, கோவில் நிர்வாகம் சார்பில், தனி ெஷட் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை முதலே, திருமூர்த்தி மலைப்பகுதிகளில், மழை பெய்து வந்த நிலையிலும், நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். சாரல் மழையுடன், பஞ்சலிங்கம் அருவியில், பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாட்டு வண்டிகளுக்கு, திருமூர்த்தி அணை கரையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களுக்கு என தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, நெரிசல் குறைக்கப்பட்டது. வாகனங்கள் அனுமதிக்காததால், அணையிலிருந்து கோவில் வரை, ஒரு கி.மீ.,துாரம் மக்கள் கூட்டம் இருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.