பதிவு செய்த நாள்
13
ஆக
2018
01:08
ஆத்தூர்: முனீஸ்வரனுக்கு, 750 ஆட்டுக்கிடா, 1,000 கோழி வெட்டப்பட்டு, ஆடித்திரு விழா கொண்டாடப்பட்டது. ஆத்தூர் அருகே, கொத்தாம்பாடி, முனீஸ்வரன் கோவிலில், கடந்த, 10ல், சக்தி அழைத்தலுடன் ஆடித்திருவிழா தொடங்கியது. நேற்று காலை, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். நேர்த்திக்கடனுக்கு, 750 ஆட்டுக்கிடா, 1,000 கோழிகள் வெட்டப்பட்டன. பின், அன்னதானம் வழங்கப்பட்டது. புஷ்ப அலங்காரத்தில், முனீஸ்வரன் அருள்பாலித்தார்.
* சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூர திருவிழா, கடந்த, 9ல் தொடங்கியது. தினமும், ஆண்டாள் நாச்சியாருக்கு, விதவித அலங்காரம் செய்யப்பட்டு, திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுகின்றன. நேற்று, கையில் தங்க கிளியுடன், சிறப்பு அலங்காரத்தில், ஆண்டாள் நாச்சியார் காட்சியளித்தார். இன்று காலை, 10:00 மணிக்கு, ஆண்டாள், சவுந்தரராஜ பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் செய்து, மணக்கோலத்தில், சேர்த்தி சேவையில் எழுந்தருளச் செய்வர். வரும், 21ல், 10ம் ஆண்டு திருப்பவித்ர உற்சவம் தொடங்கி, ஐந்து நாட்கள் நடக்கும். பவித்ர உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான உதயகால கருடசேவை, ஆக., 25ல் நடக்கும்.
* சேலம், கடை வீதி, ஏகாம்பரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில், ஆடிப்பூர புஷ்பாஞ்சலி விழா, இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது. செண்டை மேளம் முழங்க, புத்து அங்காளம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் புஷ்ப தட்டுகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு, ராஜகணபதி கோவில் வழியாக, ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம்மனுக்கு, புஷ்பாஞ்சலி நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடக்கிறது.