பதிவு செய்த நாள்
31
ஜன
2012
11:01
நகரி : திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ரத சப்தமி உற்சவ விழாவில், மலையப்ப சுவாமி, ஏழு வாகன சேவையில் மாட வீதியில் உலா வந்தார். சூரிய பகவான் ஜெயந்தி வைஷ்ணவ கோவில்களில், ரத சப்தமி உற்வசமாக கொண்டாடப்படுகிறது. திருப்பதி திருமலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 5.30 மணிக்கு, சூரிய உதயத்திற்கு முன், மலையப்ப சுவாமி முதன் முதலாக சூரியபிரபை வாகன சேவையில் திருமலையின் மாட வீதியில், தென்மேற்கு திசையில் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளினார். சூரிய ஒளி, சுவாமியின் திருமேனியில் பட்டபின், ஆரத்தி பூஜைகள் நடத்தப்பட்டு, மாடவீதியில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9 மணிக்கு, சின்ன சேஷ வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகவும், 11 மணிக்கு கருட சேவையிலும் எழுந்தருளினார். பகல் 1 மணியளவில், அனுமந்த வாகன சேவையிலும், 4 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சர்வ பூபால வாகன சேவையிலும், இரவு, 8 மணிக்கு, சந்திரபிரபையிலும், மலையப்ப சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டு பிரம்மோற்சவ விழா வாகன சேவைகள் போன்று, ரத சப்தமி தினத்தையொட்டி, ஒரே நாளில், ஏழு வாகன சேவையில் மலையப்ப சுவாமி எழுந்தருளியதை, 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.