பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
வில்லியனுார்: தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேரோட்டத்தை, நேற்று காலை, முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார். வில்லியனுார் அருகே உள்ள தொண்டமாநத்தம் பிடாரி மீனாட்சியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 6ம் தேதி இரவு, பிடாரி மீனாட்சி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் இரவு 7:00 அளவில் பிடாரி மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. முக்கிய விழாவான தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கிராமத்தில் ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பு ஆடுகளை பலியிட்டனர். சாலையில் உள்ள ஆட்டு ரத்தத்தின் மீது தேர் செல்லுவது இந்த கோவிலின் தனிச் சிறப்பாகும். கோவில் நிர்வாகம் சார்பில் நள்ளிரவு 1:00 மணியளவில் கோவில் வாசலில் முதன் முதலாக 5 ஆடுகள் பலியிடப்பட்டன. அதனை தொடர்ந்து, கிராம முழுவதும் நுாற்றுக்கணக்கான ஆடுகள் பலியிட்டு, ரத்தம் சாலையில் விடப்பட்டது. குழந்தை பேறு இல்லாதவர்கள், இக்கோவிலில் அம்மனுக்கு படையலிட்ட ரத்தசோறு சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
பிடாரி மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டதை முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இன்று(14ம் தேதி) காலை மீண்டும் தேர் புறப்பாடும், அதனை தொடர்ந்து பிற்பகல் 2:00 மணிக்கு மேல் ராமநாதபுரம் கிராமத்தில் தேர் வீதியுலா நடைபெறும். இரவு 10:00 மணியளவில் மீனாட்சி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் காப்பு கலைதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு மேல், அம்மனுக்கு உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.