கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கண்ணாடி அறையில் பள்ளியறை உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கடந்த 20ம் தேதி புஷ்பவள்ளி தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பள்ளியறை உற்சவம் நடந்தது. பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர்களுக்கு மாலையில் அலங்கார திருமஞ்சனம் செய்து வைக்கப்பட்டது. ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட மலர் மாலைகளால் உற்சவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர்களை அலங்கார பல்லக்கில் வைத்து உள்பிரகாரம் வலம் சென்று கண்ணாடி அறையில் நேற்று முன்தினம் இரவு எழுந்தருள செய்தனர். இதன்பின் சாற்றுமுறை, சேவை, ஆராதனை நடத்தி வைக்கப்பட்டது. அலங்கார தீப வழிபாடு நடத்தினர். வழிபாட்டினை தேசிக பட்டர் செய்து வைத்தார். இன்று அதிகாலை விஸ்வரூப தரிசனம், சுப்ரபாத சேவை ஆகியவற்றுக்கு பின் பள்ளியறை உற்சவம் நிறைவு செய்யப்படுகிறது.