வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்: பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஆக 2018 11:08
புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்ககான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். புதுச்சேரி அரியாங்குப்பம் வீராம்பட்டினத்தில் அமைந்துள்ள செங்கழுநீரம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 5ம் வெள்ளியன்று தேரோட்டம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஆடிப்பெருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்து வந்தது.
முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள செய்யப்பட்டது. அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். காலை 8:00 மணிக்கு துவங்கிய தேரோட்டம், நான்கு மாட வீதிகள் வழியாக சென்று, 10:00 மணியளவில் தேர் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் சார்பில் நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. டி.ஜி.பி., சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேரோட்டத்தை தொடர்ந்து, இன்று (18ம் தேதி) இரவு 9:00 மணிக்கு தெப்போற்சவமும், 19ம் தேதி இரவு 9:00 மணிக்கு முத்துப்பல்லக்கு உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவல், தேர் திருப்பணி, கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.